ADDED : ஜூலை 09, 2026 12:54 AM

பைக் மோதி வாலிபர் பலி
கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகரைச் சேர்ந்த பெயின்டர் ராமசந்திரன், 21, 'ஹீரோ பேஷன் ப்ரோ' பைக்கில், கடந்த 5ம் தேதி சென்று கொண்டிருந்தார். கீழ்ப்பாக்கம் அருகே பிரகாஷ் என்பவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரின் பின்புறம் மோதி, ராமசந்திரன் விழுந்தார். படுகாயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
இளநீர் வியாபாரி மயங்கி விழுந்து இறப்பு
கீழ்ப்பாக்கம்: கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த இளநீர் வியாபாரி சின்னசாமி, 60, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் டி.பி.சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார்.பின், உறவினர் ஓட்டிய ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருந்த சின்னசாமி, நியூ ஆவடி சாலையில் மயங்கி விழுந்ததில் அங்கேயே இறந்தார்.
காலையில் 'ரிலீஸ்' மாலையில் ரவுடி கைது
ஓட்டேரி: ஓட்டேரி, ஸ்ட்ரான்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் முகமது கலில், 28; ரவுடி. நேற்று காலை புழல் மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தவர், அம்பத்துார் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, 34, என்பவரின் ஆட்டோவில் வீட்டிற்கு சென்றார்.
ஆட்டோ பயண கட்டணம் கேட்ட ஓட்டுநரை, முகமது கலில் தாக்கினார். ஓட்டுநர் புகாரை அடுத்து, ஓட்டேரி போலீசார் முகமது கலிலை நேற்று கைது செய்தனர்.
ரூ.5.80 கோடி மோசடி; வாலிபர் கைது
சென்னை: அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கலீல் அகமது, 43. இவரை, 'பாரெக்ஸ்' எனும் வர்த்தக தளத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக்கூறி, 5.80 கோடி ரூபாயை, மதுரையைச் சேர்ந்த மகேஷ் மற்றும் சரவணகுமார், 34, ஆகியோர் ஏமாற்றியுள்ளனர்.
கலீல் அகமது புகாரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, சரவண குமாரை நேற்று கைது செய்தனர்.
பெண் போலீசிடம் ஆபாச சைகை
பரங்கிமலை: அடையாறு போக்குவரத்து பிரிவில் பணிபுரியும், 36 வயது தலைமை பெண் காவலர், ஆலந்துார் காவலர் குடியிருப்பில் வசிக்கிறார்.
நேற்று முன்தினம், எதிர் வீட்டு ஜன்னலில் நின்ற மற்றொரு பெண் போலீசின் கணவர், பெண் தலைமை காவலரிடம் ஆபாச சைகை காட்டியுள்ளார். இது குறித்து கேட்க சென்ற தலைமை பெண் காவலரை, பெண் காவலரும், அவரது கணவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
தண்டையார்பேட்டையைச் சேர்ந்த எர்னஸ்டுபால், 29, என்பவர், சாலையில் செல்லும் பெண்களை மொபைல் போனில் தவறான கண்ணோட்டத்தில் வீடியோ எடுத்துள்ளார். நேற்று முன்தினம், போலீசார் அவரை கைது செய்தனர்.
பெண் உட்பட ரவுடிகள் 4 பேர் கைது
ஓட்டேரி: புளியந்தோப்பு, கனகராஜ் தோட்டம் பகுதியில், பொதுமக்களை அச்சுறுத்திய வியாசர்பாடி சபரி, 21, ராஜ்குமார், 23, ஆகாஷ், 19, ஆகிய மூவரை கைது செய்தனர். அதேபோல், ஓட்டேரி குளக்கரை சாலை பகுதியைச் சேர்ந்த கிஷோர்குமார், 31, என்ற நபரை தாக்கிய வழக்கில், தலைமறைவாக இருந்த ஓட்டேரியைச் சேர்ந்த எழிலரசி, 56, என்பவரை, ஓட்டேரி போலீசார் நேற்று கைது செய்தனர்.
குட்கா பறிமுதல்; இருவர் சிக்கினர்
நந்தம்பாக்கம்: நந்தம்பாக்கம், ஏழுகிணறு சந்திப்பில் காரில் இருந்து குட்கா மூட்டைகளை இறக்கிய பல்லாவரம் அருள்செல்வன், 45, என்பவரை, போலீசார் கைது செய்தனர். 78 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். ஒரு மளிகை கடையில் குட்கா விற்ற பிரகாஷ், 44, என்பவரும் கைதானார்.
