ADDED : ஜூன் 04, 2026 08:51 AM
கோவிலில் மோட்டார் திருட்டு
தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் உள்ள எல்லமுத்தம்மன் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டரை, மர்ம நபர்கள் நேற்று திருடிச் சென்றனர். கோவில் அர்ச்சகர் புகாரையடுத்து, தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பழைய வண்ணாரப்பேட்டை முன்வர்பாஷா, 23, ஹரிபிரசாந்த், 22, ஆகிய இருவரை கைது செய்தனர்.
வழிப்பறி திருடன் விரட்டி பிடிப்பு
வியாசர்பாடி: வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனியைச் சேர்ந்தவர் சுந்தரி, 68; வீட்டு வேலை செய்து வருகிறார். புழலில் பேருந்தில் ஏறி, வியாசர்பாடி, அம்பேத்கர் கலைக்கல்லுாரி நிறுத்தத்தில் இறங்கி, வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் நடந்து சென்றார்.
எதிரே வந்த மர்ம நபர், சுந்தரி கழுத்தில் கிடந்த 3.5 சவரன் தங்க செயினை அறுத்து, தப்பி ஓடினார். அங்கு பணியில் இருந்த எம்.கே.பி.நகர் போக்குவரத்து போலீஸ்காரர் செந்தில், ஏட்டு ஸ்ரீதர் ஆகியோர், பொதுமக்கள் உதவியுடன் மர்ம நபரை துரத்தி பிடித்தனர்.வழிப்பறி செய்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த யுபேஷ் குமார், 24, என்பவரை கைது செய்தனர்.
அடுத்தடுத்து வழிப்பறி; சகோதரர்கள் கைது
அண்ணா நகர்: அண்ணா நகரைச் சேர்ந்த அரவிந்த், 28, 'எல்'- பிளாக் 26-வது தெரு வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அதே பகுதி 21வது தெருவில், அனீஷ்குமார் 27, என்பவர், நேற்று முன்தினம் நடந்து சென்றார்.
இருவரிடமும், அடுத்தடுத்த சில நிமிடங்களில், 'ஏப்ரிலியா' இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர்களை வழிமறித்து பணம் மற்றும் மொபைல் போன் பறித்தனர்.
அண்ணா நகர் போலீசார் விசாரித்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட நெற்குன்றத்தைச் சேர்ந்த லட்சுமணன், 22, அவரது தம்பி சஞ்சய், 20, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.
