ADDED : ஜூலை 03, 2026 12:59 AM
துாய்மை பணியாளர் இறப்பு
அண்ணாசாலை: காசிமேடு, ஜீவரத்தினம் நகரைச் சேர்ந்த சத்யா, 42, என்ற பெண், ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் துாய்மை பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார்.
அங்குள்ள கழிப்பறையை சுத்தம் செய்துபோது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
பெண்ணை சீண்டியவர் கைது
அமைந்தகரை: ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், சென்னை அமைந்தகரையில் பெண்கள் விடுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
சூளைமேடு, திருவள்ளுவர்புரம் வழியாக, கடந்த 29ம் தேதி நடந்து சென்ற இவரிடம், முகவரி கேட்பது போல் நடித்து சில்மிஷத்தில் ஈடுபட்ட, தனியார் வணிக வளாக மேற்பார்வையாளரான லோகேஷ்ராஜ், 42, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
தம்பதியை பிளேடால் கிழித்த மூவர் கைது
கோயம்பேடு: மணலியைச் சேர்ந்த காளிதாஸ், 45, - கீர்த்தி பிரியா, 36, தம்பதி, கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே நடைபாதையில் படுத்திருந்தனர்.
கடந்த 29ம் தேதி இரவு அங்கு வந்த மாரிமுத்து என்பவர், தன் மனைவி குறித்து கேட்டபோது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாரிமுத்து உட்பட மூவர், பிளேடால் தம்பதியின் முகம், தாடை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கிழித்து தப்பினர். மூவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.
22 கிலோ கஞ்சா பறிமுதல்
குன்றத்துார்: குன்றத்துார் அருகே திருமுடிவாக்கம் 'சிட்கோ' தொழிற்பேட்டை பகுதியில், நேற்று முன்தினம் சுற்றித்திரிந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீர வெங்கட ரமணா, 26, வெங்கடரமணா, 29, நந்தம்பாக்கம் கானா பாடகர் சுமேஷ், 39, ஜனார்த்தனன், 40, ஆகியோரை, போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது. நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
சாலையில் அராஜகம்; இருவர் கைது
மயிலாப்பூர்: ராயப்பேட்டை, கதீட்ரல் சாலை மியூசிக் அகாடமி மேம்பாலத்தில், 'பேரி கேட்' எனும் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன.
இரு தினங்களுக்கு முன், பைக்கில் வந்த வாலிபர்கள், இரும்பு தடுப்புகளை தீப்பொறி பறக்க சாலையில் இழுத்து சென்றதால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். மயிலாப்பூர் போக்குவரத்து போலீசார் விசாரித்து, அராஜகம் செய்த நெசப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், 21, ஜாபர்கான் பேட்டை தீபக்குமார், 20, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்; கே.டி.எம்., டியூக் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
