ADDED : ஜூலை 24, 2026 03:23 AM
ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி
ஆவடி: திருமுல்லைவாயில் - அண்ணனுார் ரயில் நிலையங்களுக்கு இடையே, நேற்று மதியம் 50 வயது மதிக்கத்தக்க நபர், தண்டவாளத்தை கடந்தபோது, ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவர் மஞ்சள் நிற சட்டை; காவி நிறத்தில் வேட்டி அணிந்திருந்தார். அவரது மார்பில் கவிதா என்ற பெயர் பச்சை குத்தப்பட்டு உள்ளது. இறந்தவர் குறித்து ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
'சைபர்' குற்றவாளிகள் 14 பேர் கைது
சென்னை: சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமில் பதிவு செய்யப்பட்ட, பல்வேறு சைபர் நிதி மோசடி வழக்குகளில், வெளிமாநிலங்களில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய, ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முகாமிட்டு, சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்தனர்.
11 வயது சிறுவன் மாயம்
ஓட்டேரி: ஓட்டேரி, சச்சிதானந்தம் தெருவைச் சேர்ந்த ராஜாராமின் மூத்த மகன் யஸ்வந்த், 11, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. இவர், புரசைவாக்கத்தில் உள்ள தனியார் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம், வீட்டின் கதவை வெளிப்புறமாக தாழிட்டு, யஸ்வந்த் ஓடிவிட்டார். இந்நிலையில், சிறுவன் யஸ்வந்த் மாயமானதாக, ஓட்டேரி காவல் நிலையத்தில் ராஜாராம் புகார் அளித்துள்ளார்.
'லிவிங் டுகெதர்'ரில் இருந்த பெண் தற்கொலை
கீழ்ப்பாக்கம்: கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண், புரசைவாக்கத்தில் நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணையில், பெண்ணும், பெரியமேடு பகுதியைச் சேர்ந்த இம்ரான் கான், 28, என்பவரும் புரசைவாக்கம் வீட்டில் 'லிவிங் டுகெதர்' முறையில், திருமணம் செய்யாமலேயே ஓராண்டாக வாழ்ந்தது தெரிந்தது.
மேலும், வேறொரு பெண்ணை இம்ரான் கான் திருமணம் செய்ததை அறிந்த சுகாசினி துாக்கிட்டுள்ளார். அவர் எழுதி வைத்த கடிதத்தில், 'உன்னுடன் நான் வாழ வேண்டிய வாழ்க்கையை, நீ வேறொருவருடன் வாழ்கிறாய். என்னை ஏமாற்றிவிட்டாய். என் சாவுக்கு இம்ரான் கான் உட்பட யாரும் காரணம் இல்லை' என எழுதப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.
ரவுடி வீட்டின் முன் குண்டு வீச்சு
வானகரம்: போரூர் அடுத்த தண்டலம், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி என்ற ராஜ்குமார், 26; ஆட்டோ ஓட்டுநர். இவர் மீது எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்ட இவர், மே 20ல் ஜாமினில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் இரவு, குடும்பத்தினருடன் ராஜ்குமார் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேர், வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசி தப்பினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குண்டு வீசிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
குன்றத்துார்: குன்றத்துார் அடுத்த புதுநல்லுாரில் உள்ள அய்யப்பன் கோவிலில், நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றுள்ளனர். சோமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
