ADDED : ஜூலை 27, 2026 02:04 AM

பெண்ணை கத்தியால் தாக்கியவர் கைது
திருவொற்றியூர்: திருவொற்றியூரைச் சேர்ந்த 37 வயது பெண், கணவனை இழந்து மூன்று பிள்ளைகளுடன் தனியே வசிக்கிறார். இவர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளராக பணிபுரிந்துள்ளார். அப்போது, மேற்பார்வையாளரான வியாசர்பாடியைச் சேர்ந்த சுரேஷ், 28, என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அப்பெண் வேலையை விட்டு நின்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, அவரது வீட்டிற்கு சென்ற சுரேஷ், கத்தியால் அப்பெண்ணை தாக்கி தப்பினார். விசாரித்த திருவொற்றியூர் போலீசார், சுரேஷை நேற்று கைது செய்தனர்.
விரைவு ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
ஆவடி: அண்ணனுார் ரயில் நிலையம் அருகே 60 வயது முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, நேற்று மாலை ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், தண்டவாளத்தை கடந்தபோது, சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது. ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். இறந்த முதியவர் கருப்பு, வெள்ளை புள்ளியிட்ட லுங்கி, காவி நிறத்தில் சட்டை அணிந்திருந்தார்.
வீடு புகுந்து 5 மொபைல் போன் திருட்டு
குன்றத்துார்: குன்றத்துார் அருகே திருமுடிவாக்கம் 'சிட்கோ' தொழிற்பேட்டையில் பணிபுரியும் தொழிலாளர்கள், தொழிற்பேட்டையை ஒட்டி மகாகவி பாரதி நகரில், வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். நேற்று அதிகாலை, வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம நபர், ஐந்து மொபைல் போன்கள், ஒரு மடிக்கணினியை திருடிச்சென்றார். திருமுடிவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
