ADDED : செப் 19, 2026 12:57 AM

ரூபாய் நோட்டு மாலை திருடிய 6 பேர் கைது
தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த விக்னேஸ்வரன், 33, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டருகே விநாயகர் சிலை வைத்திருந்தார். 10 ஆயிரம் மதிப்புள்ள 100 ரூபாய் நோட்டுகளை மாலையாக சிலைக்கு அணிவித்தார். அதை திருடிய அதே பகுதியைச் சேர்ந்த ரூபன், 20, சந்தோஷ், 19, மற்றும் நான்கு சிறுவர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் 5,100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
நள்ளிரவில் திருநங்கை தீக்குளிப்பு
வியாசர்பாடி: வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் பரணி, 48; திருநங்கை. மது போதையில் வீட்டில் துாங்கியவர், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பைக்கில் சென்று மது விற்றவர் சிக்கினார்
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, சால்ட் கோட்ரஸ் பகுதியில் நள்ளிரவு நேரங்களில், பைக்கில் சென்று மது விற்பனையில் ஈடுபட்ட பெரியமேடு, நடேசன் நகரைச் சேர்ந்த ஜான், 50 என்பவரை, பேசின்பாலம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தண்டையார்பேட்டையில் மது விற்ற தினேஷ், 33, என்பவரும் கைது செய்யப்பட்டார்; 28 மது பாட்டில்கள் பறிமுதலாகின.
போதை மாத்திரை 'சப்ளை' செய்தவர் கைது
கொளத்துார்: 'டெலிகிராம்' செயலி மூலம் போதை மாத்திரைகளை வாங்கி விற்று வந்த, அம்பத்துாரைச் சேர்ந்த மிதன்ராஜ், 22, திருமுல்லைவாயலைச் சேர்ந்த ரூபேஸ்வரன், 22, ஆகியோர், கைது செய்யப்பட்ட நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் சென்ற தனிப்படை போலீசார், மாத்திரைகளை சப்ளை செய்த தேஜ்முல் பாக், 30, என்பவரை கைது செய்தனர்.
