UPDATED : அக் 17, 2026 12:00 AM
ADDED : அக் 16, 2026 04:24 PM

9 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்தவர் கைது
யானைகவுனி: யானைகவுனி, கல்யாணபுரம், பள்ளத்தைச் சேர்ந்தவர் அருண், 30. இவர் மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 2017ல் யானைகவுனி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்தவர், ஒன்பது ஆண்டுகளாக விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். உயர் நீதிமன்றம் செப்., 21ம் தேதி பிடிவாரன்ட் பிறப்பித்ததை அடுத்து, போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், யானைகவுனி வந்த அருணை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை
ஐஸ்ஹவுஸ்: ராயப்பேட்டை, சைவ முத்தையா 1வது தெருவைச் சேர்ந்தவர் சதிஷ், 36; கார் ஓட்டுநர். இவரது மனைவி குடும்ப பிரச்னை காரணமாக, 10ம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் துக்கம் தாளாமலும், இரு மகன்களையும் கவனிக்க முடியாமல் விரக்தியில் இருந்த சதிஷ், நேற்று முன்தினம் இரவு மனைவியின் துப்பட்டாவால் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபரை வெட்டி சிறுவர்கள் உட்பட மூவர் கைது
வண்ணாரப்பே்ட்டை: ஆர்.கே.நகரைச் சேர்ந்தவர் விக்கி, 24. இவர், நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை, என்.என்.,கார்டன், 3வது தெருவில் உள்ள துணிக்கடைக்கு சென்றார். பின் வெளியே வந்தபோது, மூன்று பேர் அவரை வழிமறித்து, அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றனர். தலையில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரித்த வண்ணாரப்பேட்டை போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கேசவன், 20 மற்றும் இரண்டு சிறுவர்கள் என, மூவரை நேற்று கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக வெட்டியது விசாரணையில் தெரியவந்தது.
குன்றத்துாரில் 4 குடிசைகள் தீயில் எரிந்து நாசம்
குன்றத்துார்: வண்டலுார் — மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், குன்றத்துார் முருகன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே தனியார் செங்கல் சூளை உள்ளது. இங்குள்ள நான்கு குடிசை வீடுகளில், இருளர் பழங்குடி மக்கள் தங்கி பணியாற்றி வந்தனர். நேற்று காலை 11:30 மணிக்கு ஆட்கள் இல்லாத நேரத்தில் இந்த வீடுகள் தீப்பற்றி எரிந்தன. தகவலறிந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் நான்கு குடிசையில் இருந்த பொருட்களும் தீக்கிரையாயின. குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
