UPDATED : அக் 23, 2026 12:00 AM
ADDED : அக் 22, 2026 03:54 PM
உதவி செய்த பஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்
வடக்கு கடற்கரை: தண்டையார்பேட்டை பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிபவர் அஜித்குமார், 28. இவர், திருவான்மியூரில் இருந்து டோல்கேட் நோக்கி செல்லும், தடம் எண்: ‘6டி’ பேருந்தை ஓட்டி சென்றார். அதிகாலை 2:00 மணிக்கு, பாரிமுனை, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்றபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது பேருந்து லேசாக உரசியது. இதில், அந்த நபர் கீழே விழுந்துள்ளார். அப்போது, அவருக்கு உதவி செய்ய சென்ற அஜித்குமாரை, அந்த நபர் சரமாரியாக தாக்கினார். பலத்த காயமடைந்த அஜித்குமார், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மர்ம நபரை வடக்கு கடற்கரை போலீசார் தேடி வருகின்றனர்.
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
ஜெ.ஜெ.நகர்: ஜெ.ஜெ.நகர், நக்கீரன் சாலை, அகத்தியர் தெருவில் முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சகாதேவன், 35 என்பவர் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்தார். தகவலறிந்த ஜெ.ஜெ.நகர் போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 29 ‘குவார்ட்டர்’ மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மூச்சு திணறல் ஏற்பட்டு கார் ஓட்டுநர் பலி
திருவேற்காடு: திருவேற்காடு அடுத்த மாதிரவேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, 28; கார் ஓட்டுநர். பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக, ‘108’ ஆம்புலன்சில், பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
