ADDED : அக் 25, 2026 10:08 PM

விமானப்படை வீட்டில் பெண்ணுக்கு தீக்காயம்
சேலையூர்: உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த சேர்ந்த அதுல்குமார் ஓஜா, 40, தாம்பரம் விமானப்படை சார்ஜெண்ட். மனைவி அனுராதா சுக்லா, 35, மற்றும் 11 வயது மகனுடன், விமானப்படை குடியிருப்பில் வசிக்கிறார்.
நேற்று முன்தினம், வீட்டில் அனுராதா சுக்லா பலத்த தீக்காயங்களுடன் இருந்தார். அவரை மீட்ட கணவர், கிண்டி ராணுவ மருத்துவமனையில் சேர்த்து, 41 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெறுகிறார். சமையல் செய்தபோது கேஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கல்லுாரி மாணவர் உயிரிழப்பு
திரு.வி.க.நகர்: பெரவள்ளூர், கே.சி.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 23; கல்லுாரி மாணவர். ஆறு மாதங்களாக கல்லுாரிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று, பணிக்குச் சென்ற பெற்றோர் வீடு திரும்பியபோது, படுக்கையறையில் விக்னேஷ் சுயநினைவின்றி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, விக்னேஷ் ஏற்கனவே உயிரிழந்தது, மருத்துவர்கள் பரிசோதனையில் தெரிந்தது. திரு.வி.க.நகர் போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பினர்.
பாலத்தில் இருந்து விழுந்து வாலிபர் படுகாயம்
மதுரவாயல்: சேலத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ராபர்ட், 23, ஏலகிரியில் உள்ள டான் பாஸ்கோ கல்வி நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டராகப் பணிபுரிகிறார். நேற்று அதிகாலை, மதுரவாயல் மேம்பாலத்தின் கீழ் விழுந்து கிடந்தார். அவரது மூக்கு, இடுப்புப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு ரத்த காயமடைந்தார். மதுரவாயல் போலீசார் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவராக விழுந்தாரா அல்லது விபத்தில் சிக்கினாரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கார் கவிழ்ந்து இரண்டு பேர் காயம்
வேளச்சேரி: சைதாப்பேட்டையைச் சேர்ந்தோர் ரிஸ்வந்த், 20, அப்துல்ரஹீது, 20. கல்லுாரி மாணவர்களான இருவரும், நேற்று முன்தினம், நண்பர் ஒருவரின் ‘ஹோண்டா அமேஸ்’ காரை வாங்கி பயன்படுத்தினர். நள்ளிரவில் நண்பரிடம் காரை ஒப்படைக்க, வேளச்சேரி நோக்கி சென்றனர்; காரை ரிஸ்வந்த் ஓட்டினார். வேளச்சேரி விரைவு சாலை மேம்பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்தது. பொதுமக்கள் காரை நிமிர்த்தினர். இதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. வேளச்சேரி போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மொபைல் போன் பறித்த 3 பேர் கைது
சென்னை: கொருக்குப்பேட்டை, ஏகாம்பரர் தெருவைச் சேர்ந்த சண்முகம், 50, கடந்த 22ம் தேதி இரவு, நண்பரைப் பார்க்க புதுப்பேட்டை, எல்.ஜி.ரவுண்டானா அருகே நடந்து சென்றார். அப்போது அவரது மொபைல் போனை பறித்து தப்பிய விக்ரம், 24, மற்றும் 16, 17 வயதுடைய இரு சிறுவர்கள் ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர். விக்ரம் புழல் சிறையிலும், சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர்.
வாலிபரை தாக்கிய நால்வர் கைது
வடக்கு கடற்கரை: பிராட்வே, நாராயண சாரங்கத் தோட்டத்தைச் சேர்ந்தவர் பரத், 36; கூலித் தொழிலாளி. கடந்த 14ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணுடன் பேசும்போது வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பெண், உறவினர்கள் நான்கு பேரை வரவழைத்து, பரத்தை இரும்புக் கம்பியால் தாக்கினார். பலத்த காயமடைந்த பரத், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வடக்கு கடற்கரை போலீசார் விசாரித்து, ராஜேஷ், 41, அஜித், 18, ராஜா, 36, மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். நேற்று மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன், அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
