UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 09:48 PM

தீ விபத்தில் கிடங்கு காவலாளி பலி
கொளத்துார்: கொளத்துார், பெரவள்ளூர், அகரம் எஸ்.ஆர்.பி., கோவில் தெருவில் இலியாஸ் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தின் முதல் மாடியில், ஆன்லைன் வர்த்தக தளமான, ‘ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்’ கிடங்கு செயல்பட்டு வந்தது. நேற்று காலை 7:00 மணியளவில் கிடங்கில் இருந்து புகை வெளியேறியது. காவலில் இருந்த ராமமூர்த்தி, 54, புகை மூட்டத்தில் மயங்கி விழுந்தார். பெரவள்ளூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து பெரவள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தெரு நாயை வெட்டிய மர்ம நபருக்கு வலை
கீழ்ப்பாக்கம்: ஓட்டேரி அருகே நம்மாழ்வார்பேட்டையில் சுற்றித்திரிந்த இரு தெரு நாய்களுக்கு, மாநகராட்சி கருத்தடை மையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு, மீண்டும் அதே பகுதியில் விடப்பட்டன. இதில் ஒரு நாயின் தலையில் மர்மநபர் கத்தியால் வெட்டியுள்ளார். மழையில் நனைந்தபடி காயத்துடன் தவித்த நாயை, அப்பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மீட்டு, வேப்பேரி கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, உணவும் வழங்கினார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, மர்ம நபரை தலைமைச் செயலக காலனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீட்டில் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு
மாம்பலம்: தி.நகர், காவிரி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 36; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது, விலை உயர்ந்த சைக்கிள் திருட்டு போனது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், வீட்டு வளாக கேட்டை திறந்து, மர்ம நபர் சைக்கிளை திருடி செல்வது பதிவாகி இருந்தது. மாம்பலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட நால்வருக்கு ‘காப்பு’
ஓட்டேரி: பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 23; ஓட்டேரி, பட்டாளம் பகுதியில் தங்கி பானி பூரி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக நடந்து சென்றபோது, இருவர் வழிமறித்து அவரிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றனர். புளியந்தோப்பு போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட திரு.வி.க., நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த சமீருதீன், 19, சையது ரியான், 19, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
அதேபோல், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷாநவாஸ் மாலி, 29, புளியந்தோப்பு, பட்டாளம் பகுதியில் தங்கி வெல்டிங் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில் பட்டாளம் சந்தை வழியாக சென்றபோது, இருவர் வழிமறித்து 4,000 ரூபாய் பணம், ஏ.டி.எம்., கார்டை பறித்துச் சென்றனர். புளியந்தோப்பு போலீசார் விசாரித்து, கே.பி., பார்க் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவரை நேற்று கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.
கழிவுநீர் லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு
துரைப்பாக்கம்: துரைப்பாக்கம், எம்.சி.என்., நகரைச் சேர்ந்தவர் டின்னா, 28; தனியார் நிறுவன ஊழியர். நேற்று, அடையாறில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி இருசக்கர வாகனத்தில் பெருங்குடி, சீவரம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கழிவுநீர் லாரி மோதியது. இதில் தடுமாறி விழுந்த டின்னா, லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
புகைத்தவரின் பல்லை உடைத்த இருவர் கைது
அயனாவரம்: அயனாவரம், போர்ச்சீயஸ் தெருவைச் சேர்ந்த சிவா, 39, அக்., 31ம் தேதி வீட்டின் அருகே சிகரெட் புகைத்து கொண்டிருந்தார். அருகில் நின்றிருந்த நபர் மீது சிகரெட் புகை பட்டதால், ஆத்திரமடைந்த அவர் நண்பர்களுடன் சேர்ந்து சிவாவிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கினார். இதில் சிவாவின் பல் உடைந்தது. அயனாவரம் போலீசார் விசாரித்து, அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்தர், 26, கார்த்திகேயன், 25, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.
கத்தியை சுழற்றி ரீல்ஸ்: காவலாளி மீது வழக்கு
கிண்டி: கிண்டி, நாகிரெட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர் தாமோதரன், 24; கிண்டி பல்நோக்கு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த காவலாளி. கடந்த மாதம் 12ம் தேதி நாகிரெட்டி தோட்டம் அம்மன் கோவில் திருவிழாவில், நீளமான கத்தியை சுழற்றி சிலம்பம் விளையாடுவது போல், ‘ரீல்ஸ்’ எடுத்து 25ம் தேதி சமூக வலைதளத்தில் பதிவிட்டார். கிண்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து தாமோதரனிடம் விசாரித்து வருகின்றனர்.
பேருந்து கண்ணாடியை உடைத்த ரவுடி கைது
மாதவரம்: மணலி, மாத்-துார் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன், 43. மாநகர அரசு பேருந்து ஓட்டுநர். கடந்த மாதம் 28ம் தேதி, மீஞ்சூரில் – கோயம்பேடு தடம் எண்: 121 பேருந்தை ஓட்டி வந்தார். மாதவரம் சின்ன ரவுண்டானாவில் நிறுத்தியபோது, -துாசி பறந்ததால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர், மஞ்சுநாதனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். பேருந்து புறப்பட்டதும் கல்லை வீசி பின்பக்க கண்ணாடியை உடைத்து தப்பினார். மாதவரம் போலீசார், எண்ணுாரைச் சேர்ந்த காசிமேடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி சந்தோஷ், 24, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
