ADDED : நவ 05, 2026 05:09 AM

பேராசிரியையிடம் செயின் பறித்தவர் கைது
குன்றத்துார்: சோமங்கலம், பிருந்தாவனம் நகரைச் சேர்ந்தவர் சோனா, 35; கல்லுாரி பேராசிரியை. அக்., 15ம் தேதி வீட்டின் அருகே ஸ்கூட்டரில் சென்றபோது, மர்ம நபர் முகத்தில் தாக்கி, அவரது 7 சவரன் செயினை பறித்துச் சென்றார். விசாரித்த சோமங்கலம் போலீசார், செயின் பறித்த திருவண்ணாமலையைச் சேர்ந்த, ‘பொக்லைன்’ ஆப்பரேட்டர் மணிகண்டன், 27, என்பவரை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மாமூல் கேட்ட சிறார் உட்பட இருவர் கைது
புளியந்தோப்பு: ஓட்டேரி, போகிபாளையத்தைச் சேர்ந்தவர் ஷானவாஸ் மாலிக், 28; வெல்டிங் தொழிலாளி. கடந்த 2ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றபோது, வழிமறித்த இருவர், தீபாவளிக்கு மாமூல் கேட்டு, 4,000 ரூபாயுடன் மணிபர்சை பறித்துச் சென்றனர். விசாரித்த புளியந்தோப்பு போலீசார், நேற்று முன்தினம் புளியந்தோப்பைச் சேர்ந்த விஷ்வா, 19, 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
வாலிபரை வெட்டிய 5 பேர் கைது
மேற்கு தாம்பரம்: ‘டேட்டிங் ஆப்’ மூலம் பெண் குரலில் பேசி, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த நித்திஷ்குமார், 24, என்ற வாலிபரை, மேற்கு தாம்பரத்திற்கு வரவழைத்து பணம் கேட்டு மிரட்டி, மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது. படுகாயமடைந்த நித்திஷ்குமாருக்கு தலையில், தாம்பரம் அரசு மருத்துவமனையில் 15 தையல்கள் போடப்பட்டன. விசாரித்த பீர்க்கன்காரணை போலீசார், வாலிபரை வெட்டிய தாம்பரத்தைச் சேர்ந்த ஹரிஷ், 24, அஜித், 18, அன்பரசு, 22, அபிஷேக், 19, மற்றும் 17 வயது சிறுவன் என ஐந்து பேரை, நேற்று கைது செய்தனர்.
மோசடிக்கு உடந்தை இருவர் சிக்கினர்
ஆவடி: -போரூர், சக்தி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. ‘டிரேடிங்’ தொடர்பாக வந்த குறுஞ்செய்தியை நம்பிய பாலாஜி, அதில் கூறப்பட்ட வங்கி கணக்குகளுக்கு, 92.45 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். பணம் திரும்பி கிடைக்காததால், ஆவடி போலீஸ் கமிஷனரக இணையவழி குற்றப்பிரிவில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், வியாசர்பாடியைச் சேர்ந்த பாலசந்தர், 25, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த அகமது தஹசின், 33, ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். விசாரணையில், பொதுமக்களிடம் இருந்து வங்கி கணக்கு விபரங்களை பெற்று, மோசடி நபர்களுக்கு கொடுத்து, ‘கமிஷன்’ தொகை பெற்று தெரிந்தது.
வழிப்பறி ரவுடிகள் இருவர் கைது
வியாசர்பாடி: வியாசர்பாடி, பி.வி.காலனியில் நேற்று, கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்த ‘பங்களா’ சஞ்சய், 26, கிஷோர்குமார், 20, ஆகியோரை கைது செய்த எம்.கே.பி.நகர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.
பெண்ணிடம் ஆபாச சைகை: கறிக்கடைக்காரர் கைது
துரைப்பாக்கம்: கேரளாவை சேர்ந்த 27 வயது பெண், ஓ.எம்.ஆர்., கந்தன்சாவடியில் தங்கி, டைடல் பார்க் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று காலை பணிக்கு புறப்பட்டபோது, கந்தன்சாவடி, சந்தோஷ் நகரைச் சேர்ந்த கறிக்கடை உரிமையாளர் முகமது ஷாஹித், 27, என்பவர், உடைகளை கழற்றி ஆபாசமாக செய்கை காட்டியுள்ளார். பெண் அளித்த புகாரின்படி, துரைப்பாக்கம் போலீசார் நேற்று முகமது ஷாஹித்தை கைது செய்தனர்.
கோவில் உண்டியல் திருட்டு
குன்றத்துார்: சோமங்கலம், செங்குந்தர் தெருவில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் முன் இருந்த உண்டியலை, நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் திருடிச் சென்றனர். சோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டாஸ்மாக் கடையை முன்பே மூடியதால் தகராறு
திரு.வி.க.நகர்: கொளத்துார், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரபு, 33, குமரன் நகரில் உள்ள ‘டாஸ்மாக்’ மதுக்கடைக்கு நேற்று முன்தினம் இரவு 9:40 மணிக்கு மது வாங்க சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், டாஸ்மாக் ஊழியர்கள் கடையை மூடிவிட்டனர். இதுகுறித்து பிரபு, டாஸ்மாக் ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஆத்திரமடைந்த சூப்பர்வைசர் சதீஷ், விற்பனையாளர்களான பாஸ்கர், யுவராஜ் ஆகியோர் பிரபுவை தாக்கியுள்ளனர். திரு.வி.க.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* போலீஸ்காரரை தாக்கிய போதை ஆசாமி கைது
கொடுங்கையூர்: கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார், நேற்று முன்தினம் இரவு டி.எச்.சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முயன்ற போலீஸ்காரர் சதீஷ்குமாரை, வாலிபர் ஒருவர் கன்னத்தில் அடித்து தாக்கியுள்ளார். புகாரின்படி, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த குமரன், 25, என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
* போலீசாரை தாக்கிய ஐவர் மீது புகார்
ஓட்டேரி: ஓட்டேரி, சேமாத்தம்மன் காலனியில், நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் சட்ட விரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேர், ரோந்து பணியில் ஈடுபட்ட ஓட்டேரி போலீசாரை தாக்கினர். இதில், போலீஸ்காரர் வெங்கடேஸ்வரன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிறப்பு சோதனை: 33 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆவடி: ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில், நேற்று முன்தினம் சிறப்பு சோதனை நடந்தது. இதில், ஆவடி மற்றும் செங்குன்றம் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 33.4 கிலோ கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
