தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


ADDED : நவ 05, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2026 09:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பஸ் நடத்துநரை தாக்கிய மாணவர்கள் இருவர் கைது

ஆவடி: ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரில் இருந்து, நேற்று முன்தினம் புறப்பட்ட தடம் எண்: 61-கே மாநகர பேருந்து, 30க்கும் மேற்பட்ட பயணியருடன் ஆவடி நோக்கி சென்றது. 'வேல்டெக்' நிறுத்தத்தில் ஏறிய கல்லுாரி மாணவர்கள் ஆறு பேர், படிக்கட்டில் தொங்கியபடி வந்தனர். பின்பக்க கதவு மூடாமல் இருக்க கல் வைத்து அடைத்தனர். இதை பார்த்த நடத்துநர் சர்வேசன், 50, அவர்களை கண்டித்தார். ஆத்திரமடைந்த மாணவர்கள், சர்வேசனை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பாக வழக்கு பதிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், சர்வேசனை தாக்கிய ஆவடியைச் சேர்ந்த 15 வயது ஐ.டி.ஐ., மாணவர்கள் இருவரை பிடித்து, விசாரணைக்கு பின், திருவள்ளூரில் உள்ள சிறார் குழும நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழிப்பறியில் ஈடுபட்ட ஒருவர் சிக்கினார்

ராயப்பேட்டை: ராயப்பேட்டையைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சண்முகம், 47, கடந்த 26ம் தேதி, ராயப்பேட்டை, அம்மையப்பன் தெரு வழியாக நடந்து சென்றார். அவரிடம் இருவர் கத்திமுனையில் 300 ரூபாய் பறித்துச் சென்றனர். இது குறித்த விசாரித்த ராயப்பேட்டை போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட ராயப்பேட்டையைச் சேர்ந்த மலர்மன்னன், 40 என்பவரை, நேற்று கைது செய்தனர்; மற்றொருவரை தேடி வருகின்றனர்.

போதையில் விபத்து ஏற்படுத்தியவர் கைது

சென்னை: எழும்பூர், எத்திராஜ் சாலையில் நேற்று முன்தினம் இரவு அதிவேகமாக வந்த ‘கியா’ கார் சிக்னல் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. திருவல்லிக்கேணி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரின் விசாரணையில், சூளையைச் சேர்ந்த தீபக் சோர்டியா, 54 என்பவர், மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், காரை பறிமுதல் செய்தனர்.

சொத்து பிரச்னை: தம்பியை தாக்கியவர் கைது

பழவந்தாங்கல்: பழவந்தாங்கல், நேரு காலனியைச் சேர்ந்தவர் சிவமுருகன், 39. இவரது சகோதரர் அதேபகுதியை சேர்ந்த இளங்கோவன், 44. இருவருக்கும் சொத்து பிரச்னை இருந்துள்ளது. கடந்த 3ம் தேதி சிவமுருகன் வேலை பார்க்கும் இடத்திற்கு சென்ற இளங்கோவன், தம்பி சிவமுருகன் அங்கு இல்லாததால் அவரது இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி உள்ளார். தொடர்ந்து தம்பியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு, அவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி சென்றார். இது குறித்து விசாரித்த பழவந்தாங்கல் போலீசார், இளங்கோவனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

லாரி திருடர்கள் இருவர் பிடிபட்டனர்

புழல்: கடலுார் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 29; லாரி ஓட்டுநர். கடந்த 2ம் தேதி, பண்ருட்டியிலிருந்து சவுக்கு கம்புகளை ஏற்றி சென்னை வந்த மோகன்ராஜ், இரவு 10:30 மணியளவில் புழல் அணுகு சாலையில் லாரியை நிறுத்தி, அருகே உள்ள ஹோட்டலில் சாப்பிட சென்றார். ஆனால் போகும்போது சாவியை லாரியிலேயே வைத்து சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை. இது குறித்த புகாரை அடுத்து விசாரித்த புழல் போலீசார், ‘பொக்லைன்’ ஆப்பரேட்டர்களான கடலுாரைச் சேர்ந்த தணிகைவேல், 25 மற்றும் சிலம்பரசன், 35 ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாரியும் மீட்கப்பட்டது. இருவரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவலாளியின் பல்லை உடைத்தவர் கைது

கே.கே.நகர்: சைதாப்பேட்டை, பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் மாறன், 56. இவர், அசோக் நகர் 100 அடி சாலை பகுதியில், தனியார் வங்கி செயல்படும் கட்டடத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். அதே கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள மற்றொரு நிறுவனத்தில், பிரகாஷ், 27 என்பவர், கார் ஓட்டுநராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காலை பிரகாஷ், வங்கி அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட ‘பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்தியுள்ளார். அப்போது, ‘காரை அங்கு நிறுத்த வேண்டாம்’ என காவலாளி மாறன் கூறியதால், ஆத்திரமடைந்த பிரகாஷ் மாறனிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். இதில், அவரது பல் உடைந்தது. விசாரித்த கே.கே.நகர் போலீசார், காவலாளியை தாக்கிய கண்ணம்மாபேட்டை புதுத்தெருவைச் சேர்ந்த பிரகாஷை நேற்று கைது செய்தனர்.

கொலை முயற்சி: தலைமறைவு குற்றவாளி சிக்கினார்

அண்ணா நகர்: அண்ணா நகரில், கடந்த 2022ம் ஆண்டு சிலம்பரசன் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில், ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த ஜோஸ்வா, 24 என்பவரை, அண்ணா நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த ஜோஸ்வா, வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து, கடந்த 16ம் தேதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. திருவல்லிக்கேணியில் பதுங்கியிருந்த அவரை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தனியார் நிறுவனத்தில் திருட முயன்றவர் கைது

வானகரம்: கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 40. இவர், வானகரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை நிறுவனத்திற்கு வந்தபோது, மர்ம நபர் ஒருவர், நிறுவனத்திற்குள் அத்துமீறி புகுந்து, லோடு வாகனத்தின் பேட்டரியை கழற்றி திருட முயன்றதை பார்த்தார். அவரை மடக்கிப்பிடித்து, வானகரம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், 22, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், திருட்டு முயற்சிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர்.

நண்பர்களுக்கு இடையே அடிதடியில் முடிந்த கிண்டல் பேச்சு

துரைப்பாக்கம்: பெருங்குடி, கல்லுக்குட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக், 24. இவர், ஒரு மாதத்திற்குமுன் அடிதடி வழக்கில் சிறை சென்றுவிட்டு, சில நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்தார். இவரது நண்பர் ஜாபர், 21. நேற்று முன்தினம் கார்த்திக்கை பார்த்து, ‘என்னடா மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டு வந்துவிட்டாயா’ என, சிறை சென்றதை கிண்டலாக கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், ஜாபரை சரமாரியாக கார்த்திக் தாக்கினார். சில மணி நேரம் கழித்து, கார்த்திக் வீட்டுக்கு சென்று, ஜாபர் அவரை சரமாரியாக தாக்கினார். காயமடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விசாரித்த துரைப்பாக்கம் போலீசார், நேற்று, இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஆட்டோவை திருடிய இருவர் சிக்கினர்

கோடம்பாக்கம்: கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் பார்டர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் குலோத்துங்கன் 38; ஆட்டோ ஓட்டுநர். வீட்டின் முன் நிறுத்தியிருந்த இவரது ஆட்டோ, கடந்த மாதம் 12ம் தேதி திருட்டு போனது. விசாரித்த கோடம்பாக்கம் போலீசார், ஆட்டோவை திருடிச் சென்ற படப்பையைச் சேர்ந்த முத்து, 36, புழலைச் சேர்ந்த பிரகாஷ், 22, ஆகியோரை நேற்று கைது செய்தனர். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us