'டிவி, லேப்டாப்'
திருடிய நபர் கைது
அசோக் நகர்: கீழ்ப்பாக்கம், வாசுதேவன் தெருவைச் சேர்ந்த ரவிகுமார், 55, கோடம்பாக்கம் வாத்தியார் தோட்ட பகுதியில், வங்கியில் இருந்து கடன் பெற்று தரும் நிறுவனம் நடத்துகிறார்.
அலுவலகத்தின் பூட்டை உடைத்து 'டிவி, லேப்டாப்' மற்றும் ஐந்து கணினி மானிட்டர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக, இம்மாதம் 24ம் தேதி அசோக் நகர் போலீசில் புகார் அளித்தார்.
விசாரித்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட கோடம்பாக்கத்தைச சேர்ந்த மணிகண்டன், 38, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 'டிவி' மற்றும் ஐந்து மானிட்டர்களை பறிமுதல் செய்தனர்.
கூரை பூச்சு விழுந்து
மூதாட்டி காயம்
சென்னை: பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், இரண்டாவது தளத்தில் வசித்து வருபவர் சரோஜா, 74. நேற்று காலை, இவரது வீட்டின் கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்து, ரத்தம் கொட்டியது.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மூதாட்டிக்கு தலையில், 10 தையல் போடப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து, பட்டினப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பேப்பர் சேகரிப்பாளர்
மண்டை உடைப்பு
திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் நடைபாதையில் வசிப்பவர் தீனா, 24. இவரும், பாண்டி, 58, என்பவரும் சுற்றுப்புற பகுதியில் காகிதம் பொறுக்கி பிழைப்பு நடத்துகின்றனர்.
நேற்று மாலை, மது போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் தீனா, கீழே கிடந்த கல்லால் தாக்கியதில், பாண்டியின் மண்டை உடைந்தது. திருவல்லிக்கேணி போலீசார், தீனாவை கைது செய்தனர்.
--
ஆட்டோ சேதம்
வாலிபர் கைது
தி.நகர்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது கிருஷ்ணா, 46. இவர், தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஸ்ரீகுருநானக் சத்சங் சபாவில் தங்கி, அங்கு வரும் பக்தர்களை ஆட்டோவில் அழைத்துச் சென்று வருபவர்.
கடந்த 24ம் தேதி கிருஷ்ணாவிற்கும், மற்றொரு ஆட்டோ ஓட்டுநருக்கும் வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த நபர் கிருஷ்ணாவை தாக்கியதுடன், ஆட்டோவையும் சேதப்படுத்தினார். விசாரித்த தேனாம்பேட்டை போலீசார், துரைப்பாக்கம் எழில்நகரைச் சேர்ந்த மணிகண்டன், 31, என்பவரை நேற்று கைது செய்தனர்.

