ஐ.டி., ஊழியரிடம் பணம் பறித்தோர் கைது
நந்தம்பாக்கம்: முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் கவுதம், 24; ஐ.டி., ஊழியர். இவருக்கு 'கிரைண்டர்' செயலி வாயிலாக, முன்பின் தெரியாத ராஜேஷ் என்பவர் அறிமுகமானார். ராஜேஷ் நேற்று முன்தினம், கவுதமை நந்தம்பாக்கம் வரவழைத்தார். இருவரும் தனியாக பேசி கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஐந்து பேர் கவுதமை தாக்கி, பணப்பரிமாற்ற செயலியான 'ஜிபே' வாயிலாக, 24,000 ரூபாய் பறித்து, அங்கிருந்து தப்பினர்; ராஜேஷை ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் நடவடிக்கையில், ஐந்து பேரும் ராஜேஷின் நண்பர்கள் என கவுதமுக்கு தெரிந்தது. இது குறித்து, நந்தம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், ராஜேஷ், 24, மணிகண்டன், 25, வரதராஜ், 24, கோகுல், 23, கணேஷ் குமார், 25, மற்றொரு கவுதம், 23, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.
போதை பெண்ணால் தவித்த போலீசார்
புளியந்தோப்பு: புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தினி, 25. புளியந்தோப்பு, ஆண்டியப்பன் தெருவில் உள்ள ரமேஷ் அடகு கடையை, நேற்று முன்தினம் இரவு இருவர் சூறையாடியதாகவும், தடுக்க சென்ற தன்னை தாக்கியதாகவும், காவல் துறை கட்டுப்பாட்டறைக்கு பெண் ஒருவர் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்று பேசின்பாலம் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கடையை சேதப்படுத்தியதற்கான எந்த தடயமும் இல்லாத நிலையில், புகார் அளித்த சாந்தினி என்பவர் அதீத மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. போதை பெண்ணால் நள்ளிரவில் போலீசார் தவிப்பிற்குள்ளாகினர்.
பஸ் ஓட்டுநரை தாக்கிய நபர் கைது
மாதவரம்: கோயம்பேடில் இருந்து மீஞ்சூர் செல்லும் தடம் எண்: 121எச் பேருந்தில், கடந்த 1ம் தேதி இரவு ஓட்டுநராக சுயாட்சி, 49 என்பவர் பணியில் இருந்தார். மாதவரம் 200 அடி சாலையில் சென்றபோது பேருந்தை வழிமறித்த இருவர், சுயாட்சியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர். தடுக்க வந்த நடத்துநரின் கைப்பையையும் பிடுங்க முயன்றனர். பயணியர் சத்தம் போடவே, கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். இத குறித்து, மாதவரம் போலீசார் விசாரித்து, லட்சுமிபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார், 26, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.
வழிப்பறி திருடர் இருவர் பிடிபட்டனர்
ஜெ.ஜெ.நகர்: முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் சேகர், 58; ஆட்டோ ஓட்டுநர். இவர், கோல்டன் ஜார்ஜ் நகர், பழைய பாலம் அருகே கடந்த செப்., 20ம் தேதி சென்று கொண்டிருந்தார். அங்கு நின்றிருந்த மூன்று பேர், சேகரின் ஆட்டோவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, 1,000 ரூபாய் பறித்து சென்றனர். இது குறித்து விசாரித்த ஜெ.ஜெ.நகர் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட, பாடி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், 29 மற்றும் சுலைமான், 25, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.
சிறுமியிடம் அத்துமீறியவருக்கு 'போக்சோ'
எம்.கே.பி.நகர்: கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, நேற்று வீட்டருகே உள்ள கடையில் டிபன் வாங்குவதற்காக சென்றார். அப்போது, அவ்வழியே வந்த மர்ம நபர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தப்பிச் சென்றார். இதுகுறித்து விசாரித்த எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொடுங்கையூரைச் சேர்ந்த ஸ்ரீராமலு, 57, என்ற கூலித்தொழிலாளியை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
கஞ்சாவுடன் சிக்கிய நான்கு பேர் கைது
பரங்கிமலை: ஆலந்துார், மடுவாங்கரை பாலம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை பரங்கிமலை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். இதில், இரண்டு கிலோ கஞ்சா சிக்கியது. விசாரணையில், கொளப்பாக்கத்தைச் சேர்ந்த மனோஜ் குமார், 23, பெர்னால்டு, 27, மனிஷ் சவுத்ரி, 23, ஆனந்த், 29, என தெரிந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கடைக்காரர் துாக்கிட்டு தற்கொலை
கே.கே.நகர்: மேற்கு கே.கே.நகர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 48; பேன்சி ஸ்டோர் நடத்தி, வீடுவீடாக பால் பாக்கெட் விற்பனை செய்தும் வந்தார். இவரது மனைவி மேகனா. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கடன் பிரச்னையால், சுரேஷ் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று காலை 4:00 மணியளவில் வழக்கம்போல், பால் போடுவதற்காக கடைக்கு வந்துள்ளார். வெகு நேரமாகியும் பால் போட வராததால், அவரது தம்பி பழனி மாதவன், கடை அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது, கடைக்குள் சுரேஷ் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

