வீடு புகுந்த வாலிபருக்கு தர்ம அடி
பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரில், ஆறு வீடுகளில் புகுந்த வடமாநில நபர், அங்கிருந்தோரை அச்சுறுத்தியுள்ளார். அப்போது, தனியாக இருந்த பெண்ணின் வீட்டில் புகுந்ததும், அப்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் வட மாநில நபரை பிடித்து தர்மடி கொடுத்து, கம்பத்தில் கட்டி வைத்தனர். தகவலறிந்த பள்ளிகரணை போலீசார், அவரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். முதற்கட்ட விசாரணையில், அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்பவதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிய வந்தது.
துாய்மை பணியாளர் மீது தாக்குதல்
ஓட்டேரி: புளியந்தோப்பைச் சேர்ந்தவர் கலைவாணி, 41; துாய்மைப் பணியாளர். துாய்மைப்பணியாளர் சார்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இவருக்கு, வேலை பறிபோனது. கடந்த 1ம் தேதி ஸ்டிராஹன்ஸ் சாலையில் உள்ள ராம்கி நிறுவன அலுவலகத்திற்கு கலைவாணி சென்று வேலை கேட்டுள்ளார்.
அப்போது, அங்கு வந்த சக துாய்மைப்பணியாளர்கள், 'திரு.வி.க.நகர் மண்டல அலுவலக வாயில் முன் நடந்த போராட்டத்தின் போது, நீ ஏன் வரவில்லை?' எனக்கேட்டுள்ளனர். பின், கலைவாணியை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர்.
இதில் கலைவாணி காயமடைந்தார். தன்னை தாக்கிய புளியந்தோப்பைச் சேர்ந்த பூவரசி, 42, உள்ளிட்ட துாய்மைப்பணியாளர்கள் மீது ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவிலில் சூலம் திருடியவர் சிக்கினார்
கொடுங்கையூர்: கொடுங்கையூர், வள்ளுவர் தெருவில், இஷ்ட சித்தி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று கோவிலில் உள்ள அம்மன் சிலைக்கு பூஜைகள் நடந்தன. அப்போது, மர்மநபர் அம்மன் கோவிலில் இருந்த அரை கிலோ பித்தளை சூலத்தை இடுப்பில் மறைத்து, திருடி செல்ல முயன்றார்.
இதை பார்த்த கோவில் நிர்வாகிகள், மர்ம நபரை பிடித்து கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், வியாசர்பாடி, டி.டி.பிளாக்கைச் சேர்ந்த பாலாஜி, 19, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், சூலத்தை மீட்டனர்.
மாமனாரை தாக்கிய மருமகனுக்கு 'காப்பு'
தேனாம்பேட்டை: தேனாம்பேட்டை, ஆலயம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகவேல், 58. இவரது மூத்த மகள் பானுரேகா, 35. அவரது கணவர் கார்த்திக், 37. தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மனமுடைந்த பானுரேகா, கணவருடன் சில நாட்களாக பேசாமல் இருந்துள்ளார்.
இதற்கு மாமனார் முருகவேல் தான் காரணம் என, கார்த்திக் கடந்த 2ம் தேதி மாமனாரை கட்டையால் தாக்கி உள்ளார். விசாரித்த தேனாம்பேட்டை போலீசார், நேற்று கார்த்திக்கை கைது செய்தனர்.
தியேட்டர் ஊழியர் போக்சோவில் கைது
சென்னை: எழும்பூர் மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு, 16 வயது சிறுமியின் பெற்றோர் புகார் ஒன்றை அளித்தனர். அதில், 'திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ், 30 என்பவர், சென்னை 'கேசினோ' தியேட்டரில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
' இவர் என் மகளிடம் ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கி உள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். விசாரித்த எழும்பூர் மகளிர் காவல் நிலைய போலீசார், ரமேஷை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
கூவம் ஆற்றில் மூதாட்டியின் சடலம் மீட்பு
திருவேற்காடு: திருவேற்காடு, காடுவெட்டி பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தின் கீழ், 55 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் ஒன்று மிதப்பதாக, நேற்று காலை தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி தீயணைப்பு துறையினர், கயிறு கட்டி சடலத்தை மீட்டனர். திருவேற்காடு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா பதுக்கிய மூவருக்கு 'கம்பி'
ஓட்டேரி: ஓட்டேரி, பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மங்களபுரத்தைச் சேர்ந்த மரிய ஜோசப் இருதயராஜ், 31. சரத், 21, ஹரிஷ் குமார், 21, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.

