7 கிலோ கஞ்சா பறிமுதல்
எழும்பூர்: மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் இருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில், எழும்பூருக்கு நேற்று முன்தினம் வந்தது.
அதில் வந்த மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குடியைச் சேர்ந்த பினாய் சேத்ரி, 32, என்பவரின் சூட்கேசில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்புடைய 7 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. ரயில்வே போலீசார் அவரை பிடித்து, போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம் பணிமனையில் இருந்து தடம் எண் 'எம்14' மாநகர பஸ், கடந்த 8ம் தேதி இரவு புறப்பட்டது. அதன், ஓட்டுநராக பாலாஜி, 48, என்பவரும், நடத்துநராக ஹரிதாஸ், 42, என்பவரும் இருந்தனர்.
ஆதம்பாக்கம், பழண்டியம்மன் கோவில் அருகே பேருந்து சென்றபோது, பின் பகுதி கண்ணாடியை கல்லால் உடைத்த ஒருவர், அங்கிருந்து தப்பினார். ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, பஸ் கண்ணாடியை உடைத்த முகலிவாக்கத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ், 21, என்ற ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர்.
கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு
துரைப்பாக்கம்: பெருங்குடி, கல்லுக்குட்டை பிரதான சாலையில், சூப்பர் என்ற மெடிக்கல் ஸ்டோர் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, பூட்டை உடைத்து, போதை மருந்து பயன்படுத்த ஊசி, நட்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் 5,000 ரூபாய் திருடப்பட்டது. மேலும் அருகில் உள்ள ஒரு ஸ்டுடியோ பூட்டையும் உடைத்து, திருட முயற்சி நடந்துள்ளது. துரைப்பாக்கம் போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து திருடர்களை தேடுகின்றனர்.
வீட்டில் 3 சவரன் நகை மாயம்
ஓட்டேரி: புளியந்தோப்பு, பி.எஸ்.மூர்த்தி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 31. இவரது வீட்டுக்கு சென்ற அண்ணி ஷகீலா, 3 சவரன் தங்க நகையை சதீஷ் வீட்டில் கழற்றி வைத்துள்ளார். அது காணாமல் போனது. இதுகுறித்த புகாரின்படி, ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

