
தலைமறைவு
குற்றவாளி கைது
கோயம்பேடு: கோயம்பேடு காவல் நிலையத்தில், கடந்த 2022ம் ஆண்டு, வழிப்பறி வழக்கில் தினேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமினில் வெளியே வந்த அவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். அதனால், கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த கோயம்பேடு போலீசார், தினேஷை நேற்று கைது செய்தனர்.
தப்பிய குற்றவாளி
துரத்தி பிடித்து கைது
ஐஸ் ஹவுஸ்: திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில், கஞ்சா குற்றவாளி நதிம், 26, என்பவரை, மீனம்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரை மிரட்டும் விதமாக, தன்னைத்தானே பிளேடால் அறுத்துக் கொண்டார்.
அவரை கைது செய்த போலீசார், ஆட்டோவில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது, தப்பி ஓடிய கஞ்சா குற்றவாளியை, போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நதிம், 26 என்பவர் மீது 6 கஞ்சா வழக்குகள் உள்ளன.
உண்டியலை உடைத்து
திருட முயன்றவர் கைது
கே.கே., நகர்: கே.கே., நகர், பி.டி.ராஜன் சாலையில், சக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, சின்ன போரூர் செந்தில் நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 55, என்பவர், செயல் அலுவலராக பணி செய்து வருகிறார்.
இங்கு, தட்சிணாமூர்த்தி என்பவர் காவலாளியாக பணி செய்து வருகிறார். இவர், நேற்று காலை கோவிலில் உள்ள உண்டியலை பார்த்த போது, மர்ம நபர்கள் அதை உடைத்தது தெரியவந்தது.
புகாரின்படி விசாரித்த கே.கே., நகர் போலீசார், உண்டியலை உடைத்து திருட முயன்ற, சாலிகிராமத்தை சேர்ந்த தங்கவேல், 42, என்பவரை கைது செய்தனர்.
'போதை' வழக்கில் மேலும் ஒருவர் கைது
அரும்பாக்கம்: அரும்பாக்கம் பகுதியில், மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் கடத்திய வழக்கில், ஜூன் 30ம் தேதி, அந்தோணி, 29, தீபக்ராஜ், 25, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து சுபாஷ், அஜித் கண்ணன், ராஜவிக்ரம் உட்பட ஒன்பது பேர் கைதாகினர்.
இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய வடபழனியை சேர்ந்த கணேஷ் ரேசர், 28, என்பவர், நேற்று கைது செய்யப்பட்டார்.

