
சிறுவனிடம் அத்துமீறியவர் கைது
கொளத்துார்: கொளத்துார் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன், பழுதடைந்த தன் சைக்கிளை சரி செய்ய, பெரம்பூரில் உள்ள ஒரு சைக்கிள் கடைக்கு, நேற்று எடுத்துச் சென்றார். அங்கு, கடைக்காரர், சிறுவனிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். போலீசார் விசாரித்து, அஞ்சுகம் நகரைச் சேர்ந்த ஷேக் கலாம் பாஷா, 49, என்பவரை, 'போக்சோ' வழக்கில் கைது செய்தனர்.
பெண்ணிடம் நகை பறித்தவர் கைது
கொளத்துார்: கொளத்துார் காவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி, 39. கணவரை இழந்த இவர், இரு மகன்களுடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் சமைத்து கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் நகையை பறித்து தப்பியோடினார். கொளத்துார் போலீசார் விசாரித்து, விநாயகபுரத்தைச் சேர்ந்த யுகேஷ்ராஜ், 37, என்பவரை நேற்று கைது செய்தனர்.
8 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை: மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து, திருச்சி செல்லும் வாராந்திர ரயில், நேற்று முன்தினம் இரவு எழும்பூர் வந்தது. அதில், ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா கடத்தி வந்த ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சத்யராஜன் சேய்தி, 27, என்பவரை கைது செய்தனர். அவரது பையில், 8 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு 4 லட்சம் ரூபாயாகும்.
வீடு புகுந்து நகை திருட்டு
கோயம்பேடு: அரும்பாக்கம், ஜெகன்நாதன் நகரைச் சேர்ந்தவர் விமலா, 46. கடந்த 2025 அக்., 9ல், தன் வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்கினார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், 3 சவரன் செயின், நவரத்தின மோதிரம் மற்றும் 80,000 ரூபாயை திருடிச்சென்றார்.
திருட்டில் ஈடுபட்ட துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், 36, என்பவரை, கோயம்பேடு போலீசார் நேற்று கைது செய்தனர்.
பட்டா கத்தியுடன் வாலிபர் 'ரீல்ஸ்'
ஆவடி: ஆவடியைச் சேர்ந்த ஜெகன் என்ற வாலிபர், தன் 'இன்ஸ்டா' வலைதள பக்கத்தில், பட்டா கத்தியுடன் வீடியோ ஒன்று பதிவேற்றி உள்ளார்.
'எங்க வேணா போ, யாராண்ட வேணா போ, எத்தனை போலீஸ் வேணும்னாலும் இட்டுனு வா, ஆனா கன்பார்மா ஒருநாள் உன் உயிர் போயிடும்' என, நடிகர் தனுஷ் பட வசனத்தை பட்டா கத்தியுடன் 'ரீல்ஸ்' வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வியாபாரி வீட்டில் நகை திருட்டு
தாம்பரம்: மேற்கு தாம்பரம், கடப்பேரியைச் சேர்ந்தவர் சிவகுமார், 47; மீன் வியாபாரி. இவர், டிச., 31ம் தேதி காலை, வீட்டை பூட்டி, மனைவி பழனியம்மாளுடன் மீன் வியாபாரத்திற்கு சென்றார். இரவு திரும்பியபோது, பூட்டியிருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 5 சவரன் நகை மற்றும் 18,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.
ரயில்வே ஊழியர் இறப்பு
ஆவடி: ஆவடி அடுத்த, கோவில்பதாகை, சுவாதி தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 58; ரயில்வேயில் தொழில்நுட்ப ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, உணவு சாப்பிட்டு படுக்கும்போது, திடீரென நெஞ்சு எரிச்சலில் அவதிப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை, படுக்கையில் சுயநினைவின்றி இருந்தார்.
ஐ.சி.எப்., மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
மொபைல் போன்கள் திருட்டு
எம்.கே.பி.,நகர்: கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ஜாகிர்உசேன், 45; புளியந்தோப்பு, மன்னார்சாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் இஸ்மாயில், 32; எலக்ட்ரீஷியன்கள். இருவரும், வியாசர்பாடி, கோல்டன் காம்ப்ளக்ஸ் பகுதியில் புதிதாக கட்டி வரும் அடுக்குமாடி வீட்டின் முதல் மாடியில் தங்கள் போன்களை 'சார்ஜ்' போட்டு விட்டு, எலக்ட்ரிக் வேலை செய்து வந்தனர். மர்ம நபர்கள், இந்த இரு போன்களை திருடியது இல்லாமல், பெயின்டர் ரஞ்சித் என்பவரின் மொபைல் போனையும் திருடியுள்ளனர்.

