ADDED : ஜூலை 04, 2026 02:16 AM

விபத்தில் மாற்றுத்திறனாளி பலி
நந்தம்பாக்கம்: நந்தம்பாக்கம், 6வது தெருவைச் சேர்ந்தவர் சதிஷ்குமார், 36; கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. நேற்று முன்தினம் நள்ளிரவு, 'யமஹா ஆர்15' பைக்கில், வர்த்தக மையம் பின்புறம் கணபதி காலனி, 30 அடி சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.
வேகத்தடையை கவனிக்காமல் சென்றதில், துாக்கி வீசப்பட்ட சதிஷ்குமார், பக்கவாட்டில் இருந்த சுவரில் மோதி தலையில் காயமடைந்தார். ராஜிவ்காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று மதியம் இறந்தார்.
பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை
ஆலந்துார்: பரங்கிமலை காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து இரு குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார். வினோத்குமார், 35, என்பவர், அப்பெண்ணிடம் பழகிவந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன், குழந்தைகளை கொன்று விடுவதாக அவரை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பரங்கிமலை மகளிர் போலீசார், வினோத்குமாரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
பக்தையிடம் நகை திருடிய பெண் கைது
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புட்லுாரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு, ஆகஸ்ட் 10ல் வந்த புதுச்சேரியைச் சேர்ந்த காந்திமதி, 61, அணிந்திருந்த 5 சவரன் தங்க நகை திருடு போனது. திருவள்ளூர் தாலுகா போலீசார், ஓராண்டு கழித்து, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தேசம்மாள், 52, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். கோவில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, தேசம்மாள் நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும், விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
