ADDED : ஜூலை 10, 2026 12:53 AM

மாநகர பேருந்து கண்ணாடி உடைப்பு
திரு.வி.க.நகர்: மிண்ட் நிறுத்தத்தில் இருந்து கோயம்பேடு புறப்பட்ட தடம் எண் '48சி' மாநகர பேருந்து, ஓட்டேரி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, அடையாளம் தெரியாத ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், பேருந்தை வழிமறித்து, 'எவர்சில்வர்' பாட்டிலை வீசி ஜன்னல் கண்ணாடியை உடைத்தார். ஓட்டேரி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கார் மோதி வாலிபர் உயிரிழப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 32, 'அப்பாச்சி' பைக்கில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார்.
காஞ்சிபுரம் அருகே, எதிரே வந்த 'மாருதி சுசூகி ஸ்விப்ட்' கார், மணிகண்டன் பைக் மீதும், சரவணன் என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில் காயமடைந்த சரவணன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்; மணிகண்டன் காயமடைந்தார். கார் ஓட்டுநர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
7.6 கிலோ கஞ்சா பறிமுதல்
பெரும்பாக்கம்: பெரும்பாக்கம் பகுதியில் நேற்று ரோந்து பணியில் இருந்த போலீசார், எழில்நகரைச் சேர்ந்த செந்தில் குமார், 38, தமிழரசன், 31, ஹேமந்த்குமார் மற்றும் கலைவாணி, 31, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். நால்வரையும் நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர். பெரம்பூர் ரயில் நிலையத்தில் 200 பாக்கெட் கஞ்சா கடத்திய பீஹாரைச் சேர்ந்த முகமது ஜூனாப், 19, என்பவர் கைதானார்.
குடியிருப்போர் சங்க தலைவரை தாக்கியவர் கைது
செம்மஞ்சேரி: சோழிங்கநல்லுார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சங்க தலைவர் குருநாதன், 50. அதே குடியிருப்பில் வசிப்பவர் வீரபாண்டியன், 35; தனியார் நிறுவன ஊழியர். இவர், குடியிருப்பு குறித்து அதன் 'வாட்ஸாப்' குரூப்பில் தரக்குறைவாகவும், அவதுாறாகவும் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் வீரபாண்டியனை குரூப்பில் இருந்து நீக்கியுள்ளனர். நேற்று முன்தினம், குருநாதன் வீட்டுக்கு சென்று வீரபாண்டியன், குருநாதனை தாக்கியதில் படுகாயமடைந்தார். செம்மஞ்சேரி போலீசார், வீரபாண்டியனை கைது செய்தனர்.
குடும்ப தகராறில் கணவர் தீக்குளிப்பு
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கே.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார், 35; அச்சக கூடத்தில் கூலி தொழிலாளி. இவரது மனைவி சூர்யகலா. தம்பதிக்கு இரு மகள்கள். நேற்று முன்தினம் இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்த அய்யனாருக்கும், அவரது மனைவி தகராறு ஏற்பட்டது. இதனால் அய்யனார், வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து, தன் உடலில் ஊற்றி தீக்குளித்தார். 40 சதவீத தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வழிவிட மறுத்த பெயின்டருக்கு கத்திக்குத்து
எம்.ஜி.ஆர்.நகர்: எம்.ஜி.ஆர்., நகர், அம்மன் கோவில் குறுக்கு தெருவைச் சேர்ந்த பெயின்டர் வினோத், 31, அதே பகுதியில் மனைவி மற்றும் குழந்தையுடன், கடந்த 7ம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தார். தெருவை மறித்து நின்றிருந்த கோவிந்தராஜ், 44, என்பவரிடம் வழிவிடுமாறு கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், வீண் தகராறில் ஈடுபட்டதோடு, மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்தை குத்தி கொலை மிரட்டல் விடுத்தார்.
மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர்., நகர் போலீசார், கோவிந்தராஜை கைது செய்தனர்.
