UPDATED : ஜூலை 15, 2026 06:32 PM
ADDED : ஜூலை 15, 2026 06:24 PM
குன்றத்துார்: சோமங்கலம் அருகே காட்டரம்பாக்கத்தில் இருந்து இருங்காட்டுக்கோட்டைக்கு, 'ஹீரோ பேஷன் ப்ரோ' பைக்கில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்த கார் ஓட்டுநர் ஹரிஷ்பாப, 45, கன்டெய்னர் லாரியை முந்த முயன்று தடுமாறி விழுந்ததில், லாரி டயரில் சிக்கி அங்கேயே இறந்தார். டயரில் இருந்து உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கிரேன் உதவியுடன் லாரியை துாக்கி, உடல் மீட்கப்பட்டது.
**
மாரடைப்பால் கைதி உயிரிழப்பு
புழல்: கஞ்சா விற்ற வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்த பாலாஜி, 44, சிறுநீரக கோளாறுக்கு புழல் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட நெஞ்சு வலியால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
**
பணம் செலுத்துவதாக ரூ.22,000 பறித்தவர் கைது
வளசரவாக்கம்: காரம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்., டிபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்த வந்த இருவரிடம் பேச்சு கொடுத்த மணிமாறன், 23, என்பவர், அவர்களை ஏமாற்றி பணப்பரிமாற்ற செயலியான 'கூகுள் பே' மூலம் பணம் அனுப்பியதாக கூறி, 22,000 ரூபாயை திருடினார். அவரை போலீசார் கைது செய்தனர்.
**
கார் கண்ணாடியை உடைத்து ரூ.7 லட்சம் 'அபேஸ்'
தாம்பரம்: தேனாம்பேட்டை, எல்லையம்மன் கோவில் முதல் தெருவில் வசிக்கும் மத்தியாஸ் பீட்டர் ஆண்டனி, 46, தன் 'டாடா பன்ச்' காரில் ஏழு லட்சம் ரூபாய் வைத்திருந்தார். தாம்பரம் அருகே டீ குடித்துவிட்டு வருவதற்குள், கார் கண்ணாடியை உடைத்து, மர்ம நபர்கள் திருடியுள்ளனர். வீடு விற்ற பணம் என, தாம்பரம் போலீசில் தெரிவித்தார்; போலீசார் விசாரிக்கின்றனர்.
**
ஓட்டுநரின் மொபைல் போனை திருடியவர் கைது
ஜாம்பஜார்: ஜாம்பஜார் பாரதி சாலை 'டாஸ்மாக்' கடையில், மதுபாட்டில் வாங்க சென்ற கார் ஓட்டுநர் சதீஷ்குமாரின் மொபைல்போனை திருடிய, பழைய குற்றவாளியான சியான்முருகன், 28, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
