UPDATED : ஜூலை 27, 2026 10:21 PM
ADDED : ஜூலை 27, 2026 10:12 PM
பெரம்பூர்: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சந்திரேசகர், 69. இவர், நேற்று முன்தினம் ஊரப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி மனைவியுடன் சென்றுள்ளார். நேற்று வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 13 சவரன் நகைகள், 1.50 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. செம்பியம் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
பஸ் ஓட்டுநர், நடத்துநரை தாக்கியோர் கைது
சென்னை: எழும்பூரில் இருந்து எண்ணுார் செல்லும் வழித்தடம் எண்: 28பி மாநகர பேருந்தில், நேற்று முன்தினம் மதியம் ஒப்பந்த பணியாளரான ஓட்டுநர் மாதவன், 26, பணியில் இருந்தார். சிந்தாதிரிப்பேட்டை பகுதியில், முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பேருந்திற்கு வழிவிடாமல் சென்றுள்ளனர். மாதவன் 'ஹார்ன்' அடிக்கவே, ஆத்திரமடைந்த இருவரும் பேருந்தை மறித்து, ஓட்டுநரையும், தடுக்க வந்த நடத்துநர் சத்யாவையும் தாக்கி தப்பினர். விசாரித்த போலீசார் சேப்பாக்கத்தைச் சேர்ந்த இன்பராஜ், 43, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த நந்தகுமார், 52, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
மகளிடம் அத்துமீறிய தந்தைக்கு 'போக்சோ'
புழல்: புழல் பகுதியைச் சேர்ந்த 47 வயது ஆட்டோ ஓட்டுநரின் மனைவி வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு பிளஸ் 2 படிக்கும் 16 வயதில் மகள் உள்ளார். மனைவி வேலைக்கு சென்றவுடன், மகளிடம் அவரது தந்தை பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதை சிறுமி தன் தாயிடம் சொல்லி அழுதுள்ளார். அவரது புகாரை அடுத்து, புழல் மகளிர் போலீசார் விசாரித்து சிறுமியின் தந்தையை, குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில் நேற்று கைது, சிறையில் அடைத்தனர்.
போதை வஸ்து விற்ற 92 பேர் கைது
சென்னை: சென்னையில் கடந்த ஏழு நாட்களாக போலீசார் நடத்திய சிறப்பு சோதனையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்த 92 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 98.2 கிலோ கஞ்சா, 27.72 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள், ஓ.ஜி., கஞ்சா, மெத் ஆம்பெட்டமைன், ஹெராயின், 3,615 போதை மாத்திரைகள், ஒன்பது மொபைல் போன்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் பலி
குன்றத்துார்: திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மேத்யூ பிரதீப், 46. மது பழக்கத்திற்கு அடிமையானதால், இவரது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தார். கடந்த 25ம் தேதி, ஆண்டாள்குப்பத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில், மேத்யூ பிரதீப் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று உயிரிழந்தார். குன்றத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெண்ணிடம் மொபைல் போன் பறிப்பு
குரோம்பேட்டை: குரோம்பேட்டை லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தீபிகா, 26. ஸ்ரீ பெரும்புதுாரில் உள்ள தனியார் நிறுவன ஊழியர். நேற்று அதிகாலை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள், தீபிகாவின் மொபைல் போனை பறித்து தப்பினர். சேலையூரில் ஒருவரிடமும் மொபைல் போனை பறித்துள்ளனர். மர்ம நபர்களை குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
'பலே' சைக்கிள் திருடன் பிடிபட்டான்
வளசரவாக்கம்: ஆழ்வார் திருநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரோஹித், 38. கடந்த 23ம் தேதி இவரது சைக்கிள் திருடு போனது. வளசரவாக்கம் போலீசாரின் விசாரணையில், ஊரப்பாக்கம் ஆதனுாரை சேர்ந்த வெங்கடேஷ், 60 என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து எட்டு சைக்கிள்கள் மீட்கப்பட்டன. இவர் மீது, சைக்கிள் திருட்டு தொடர்பாக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
காதலிக்க வற்புறுத்தி பெண் மீது தாக்குதல்
ஓட்டேரி: புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணை, ஓட்டேரியைச் சேர்ந்த மோகன்ராஜ், 20 என்பவர், காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார். நேற்று மதியம் அப்பெண் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது, காதலிக்க வற்புறுத்தி தாக்கியுள்ளார். இதில் அப்பெண் காயமடைந்தார். பின் மோகன்ராஜின் நண்பர்களும் தாக்க முற்பட்டுள்ளனர். இதில் பயந்த அப்பெண், வீட்டுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளார். விசாரித்த ஓட்டேரி போலீசார், மோகன்ராஜை கைது செய்தனர். மூவரை தேடி வருகின்றனர்.
