UPDATED : ஜூலை 28, 2026 10:26 PM
ADDED : ஜூலை 28, 2026 10:22 PM
மடிப்பாக்கம்: கீழ்கட்டளை - மேடவாக்கம் பிரதான சாலையில் மெட்ரோ ரயில் வழித்தட பணி நடந்து வருகிறது. கடந்த 26-ம் தேதி அதிகாலை பைக்கில் வந்த இருவர், அங்கிருந்த சிறிய மோட்டார் மற்றும் ஒயரை திருடிச் சென்றனர். அன்றிரவு மீண்டும் திருட முயன்றபோது, அங்கிருந்த ஊழியர்கள், ஒருவரை மடக்கி பிடித்து மடிப்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் ஆலந்துாரைச் சேர்ந்த ஜான்சன், 25, என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
முன்விரோதத்தால் கத்திக்குத்து: வாலிபர் கைது
எம்.ஜி.ஆர்., நகர்: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரிஷிகுமார், 19. இவரது நண்பர் நவீனுக்கும், ஆகாஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 26ம் தேதி ரிஷிகுமாருடன் நவீன் பேசி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஆகாஷின் தம்பி சுராஜ்குமார், 30, நவீனிடம் தகராறில் ஈடுபட்டார். சமாதானப்படுத்த முயன்ற ரிஷிகுமாரை கத்தியால் குத்தி தப்பினார். விசாரித்த எம்.ஜி.ஆர்., நகர் போலீசார், பீஹாரைச் சேர்ந்த சுராஜ்குமாரை கைது செய்தனர்.
விடுதியில் பாலியல் தொழில்: ஒருவர் சிக்கினார்
எழும்பூர்: எழும்பூர், தமிழ்ச்சாலையில் உள்ள தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த டேவிட் ஜெயகுமார், 39, என்பவரை, நேற்று கைது செய்த போலீசார், இரண்டு பெண்களையும் மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
முதியவரிடம் போன் பறித்த சிறுவனுக்கு 'காப்பு'
அண்ணா நகர்: அண்ணா நகரைச் சேர்ந்த விசுவநாதன், 95. கடந்த 25-ம் தேதி அதிகாலை மூன்றாவது பிரதான சாலை வழியாக நடந்து சென்றபோது, பைக்கில் வந்த இருவர், மொபைல் போனை பறித்துச் சென்றனர். விசாரித்த அண்ணா நகர் போலீசார், பெரியமேடைச் சேர்ந்த அஜய்குமார், 19 மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
பைக், போன் பறித்த 3 பேர் பிடிபட்டனர்
செம்மஞ்சேரி: மயிலாப்பூரைச் சேர்ந்தவர் தினேஷ், 25. நேற்று முன்தினம் இரவு, செம்மஞ்சேரியில் இருந்து பைக்கில் வீடு திரும்பினார். சுனாமி குடியிருப்பு அருகில் சென்றபோது, மூன்று பேர் கும்பல் தினேஷை தாக்கி பைக், மொபைல்போனை பறித்து சென்றனர். விசாரித்த செம்மஞ்சேரி போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா, 24, மணிகண்டன், 26, ராஜா, 26, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.
போலீசை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது
பல்லாவரம்: பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், நேற்று காலை போக்குவரத்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் அருமைநாதன், 57, விதிமீறி வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தியபோது, அதன் ஓட்டுநரான திரிசூலத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார், 38, என்பவர் அருமைநாதனை தாக்கினார். விசாரித்த பல்லாவரம் போலீசார் ரமேஷ்குமாரை கைது செய்தனர்.
கத்தியுடன் ரீல்ஸ்: ரவுடிக்கு 'கம்பி'
கொடுங்கையூர்: கொடுங்கையூரில் கத்தியுடன் 'ரீல்ஸ்' வெளியிட்ட அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சூர்யா, 19, ஜோயல், 19, ராஜேஷ், 18, மற்றும் மூன்று சிறுவர்கள் என, ஆறு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், கொலை வழக்கில் தொடர்புடைய சூர்யா, மற்றவர்களை ரீல்ஸ் எடுக்க துாண்டியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், மற்ற ஐந்து பேரை எச்சரித்து அனுப்பினர்.
அரசு பள்ளி மாணவர்கள் மோதல்
படப்பை: மாடம்பாக்கம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நேற்று மாலை பள்ளி முடிந்ததும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார், மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.
நர்ஸ்களிடம் ஆபாச சைகை காட்டியவர் கைது
பூக்கடை: பூங்கா நகர், ஈ.வெ.ரா., சாலையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை விடுதிக்கு வந்த செவிலியர்களிடம், முகப்பேரைச் சேர்ந்த ஆறுமுகம், 52, என்பவர், நேற்று முன்தினம் ஆபாச சைகை காட்டினார். இது குறித்த புகாரை அடுத்து விசாரித்த பூக்கடை மகளிர் போலீசார், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
