ADDED : ஆக 13, 2026 06:21 PM
அதீத மது போதையில் பெயிண்டர் பலி
கொளத்துார்: கொளத்துார், மக்காரம் தோட்டம் பெருமாள் கோவில் தெருவில் வாடகை வீட்டில் தனியாக வசித்தவர் நண்டு, 42; பெயின்டர்; திருமணம் ஆகாதவர்.
நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு அதீத போதையில் வீட்டிற்கு வந்தவர், கட்டிலில் படுத்து கிடந்தார். சுய நினைவின்றி இருந்ததால், தகவலறிந்து வந்த ‘108’ ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் பரிசோதனை செய்தபோது, நண்டு ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது. அதீத போதையில் அவர் இறந்திருக்கலாம் என, அவர்கள் தெரிவித்தனர்.
பெண்ணிடம் 5 சவரன் தாலி பறிப்பு
குன்றத்துார்: குன்றத்துார் அருகே படப்பை அடுத்த ஆதனுார் டி.டி.சி., நகரை சேர்ந்தவர் லட்சுமி, 60, இவர், தன் கணவருடன், அதே பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7:30 மணி அளவில் நடைபயிற்சி சென்றார்.
அப்போது, அங்கு ஒரே பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த, 5 சவரன் தாலி செயினை பறித்து சென்றனர். மணிமங்கலம் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
குப்பை பொறுக்குபவர் கிடங்கில் மர்ம மரணம்
கொடுங்கையூர்: திருவொற்றியூர், அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் புகழேந்தி, 35. கொடுங்கையூர் குப்பை கிடங்கு வளாகத்தில் இரும்பு, செம்பு போன்ற உலோக பொருட்களை சேகரித்து, காயலான் கடையில் விற்று பிழைப்பு நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, குப்பை கிடங்கில் சுயநினைவின்றி புகழேந்தி படுத்து கிடந்தார். தகவலறிந்த தாய் மேகலா, புகழேந்தியை ஆட்டோ மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு, டாக்டர்கள் பரிசோதனையில் புகழேந்தி ஏற்கனவே இறந்தது தெரிந்தது.
4 வயது சிறுமியை சீண்டியவர் கைது
பூந்தமல்லி: பூந்தமல்லியை சேர்ந்த பெண் ஒருவரின், 4 வயது குழந்தை, வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. இவர்களின் உறவினரான, 50 வயது நபர், அந்த சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுப்பதாக கூறி, வீட்டினுள் அழைத்து சென்று பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் பெற்றோர் புகாரையடுத்து, பூந்தமல்லி மகளிர் போலீசார், 50 வயது நபரை நேற்று, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் ‘போக்சோ’வில் கைது செய்தனர்.
மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி
சேலையூர்: திருப்பத்துார் மாவட்டம், ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி, 37. இவரும், அவரது உறவினர் சஞ்சீவ் காந்தியும், 37, சேலையூர் அடுத்த மப்பேடு பகுதியில் நடந்துவரும் கட்டட பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, இருவரும் மது அருந்தி, இரண்டாவது மாடியில் துாங்கினர். போதையில் துாங்கிய தமிழ்மணி, இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார். சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவரிடம் பணம் பறித்த இருவர் கைது
அயனாவரம்: அயனாவரம், மாதா கோவில் தெருவைச் சேர்ந்த அரசு, 66, பெயின்டிங் வேலை செய்து வருகிறார். அயனாவரம் பேருந்து பணிமனை அருகே, கடந்த 11ம் தேதி இரவு நடந்து சென்றார். அங்கு நின்றிருந்த இருவர், அரசை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்து 500 ரூபாயை பறித்து தப்பினர். அயனாவரம் போலீசார், இச்செயலில் ஈடுபட்ட அயனாவரத்தைச் சேர்ந்த விக்னேஷ், 33, மணிகண்டன், 27, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர்.
