UPDATED : ஆக 29, 2026 07:39 PM
ADDED : ஆக 29, 2026 07:31 PM
தாம்பரம்: தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, அவரது வீட்டில் வைத்து அதே பகுதியை சேர்ந்த பாலசந்தர், 36, என்பவர், சில்மிஷம் செய்தார். தாம்பரம் மகளிர் போலீசார், 'போக்சோ'வில் பதிந்து, தலைமறைவாக இருந்த பாலசந்தரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அ.தி.மு.க., கவுன்சிலரை தாக்கிய 2 பேர் கைது
சேலையூர்: சேலையூர் அடுத்த பதுவஞ்சேரியைச் சேர்ந்தவர் வாட்டர் ராஜ், 58; தாம்பரம் மாநகராட்சி, 69வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர். பதுவஞ்சேரி சமூக நலக்கூடம் அருகே, கடந்த 27ல் இரவு நடந்து சென்ற இவரை, மர்ம நபர்கள் தாக்கினர். இதில், கவுன்சிலரின் வாய் கிழிந்தது.
சேலையூர் போலீசார் விசாரித்து, அதே பகுதியைச் சேர்ந்த கோகுல் சஞ்சய், 19, டேவிட் பில்லா, 24, ஆகிய இருவரையும், நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பெண்ணை தாக்கிய 3 பேர் கைது
சைதாப்பேட்டை: சைதாப்பேட்டை, நெருப்புமேடு பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணின் தங்கை, இரு நாட்களுக்கு முன், கடையில் பானி பூரி சாப்பிட்டார். அப்போது அங்கு வந்த மூவர், தங்கையை கிண்டல் செய்து ஆபாசமாக பேசினர்.
இதுகுறித்து பெண், அவரது கணவர், சகோதரர் ஆகியோர் தட்டிக்கேட்டதால், மூன்று பேரும் சேர்ந்து அவர்களை தாக்கினர். சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ், 22, கேசவன், 21, சுந்தர்ராஜ், 23, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.
வாடகை காரை அடமானம் வைத்த நபர் கைது
கொளத்துார்: கொளத்துார், அரிதாஸ் இரண்டாவது தெருவில் வசிக்கும் சாமுவேல், 53, தனக்கு சொந்தமான 'ஐ20' காரை, கொளத்துாரைச் சேர்ந்த சுபாஷ், 29, என்பவருக்கு மாத வாடகையாக, கடந்தாண்டு செப்டம்பரில் கொடுத்துள்ளார். அடுத்த இரு மாதங்கள் மட்டும் வாடகை பணம் செலுத்திய அவர், அதன் பின் வழங்கவில்லை. சாமுவேல் விசாரித்தபோது, அந்த காரை, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் ஒருவரிடம் அடமானம் வைத்தது தெரிந்தது. கொளத்துார் போலீசார் விசாரித்து சுபாஷை நேற்று முன்தினம் கைது செய்தனர்; காரையும் மீட்டனர்.
1.3 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலையூர்: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரோசக் ஜா, 22, சவுரவ் குமார், 25, ஆகியோர், சேலையூர், பராசக்தி நகர், இரண்டாவது பிரதான சாலையில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற சேலையூர் தனிப்படை போலீசார், 1.3 கிலோ கஞ்சாவை நேற்று பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். பீஹாரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
2 டன் மிளகு மோசடி
பெரம்பூர்: கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் மன்சூர், 52; மிளகு வியாபாரி. இவர், பெரம்பூரை சேர்ந்த 'தளிர்' நிறுவனத்தை நடத்தி வரும் வைஷ்ணவி என்பவருக்கு, கடந்த 21ம் தேதி, 16.48 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 டன் மிளகை விற்றுள்ளார்.
இதற்காக மூன்று லட்சம் ரூபாய் மட்டும் முன்தொகையாக வைஷ்ணவி கொடுத்துள்ளார். மீதி தொகையை தராமல் இழுத்தடித்து ஏமாற்றியதால், அதிருப்தியடைந்த மன்சூர், செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
'ஏசி'யின் சாதனங்களை திருடிய நால்வர் கைது
ஓட்டேரி: ஓட்டேரி, ஹைதர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரோஷம், 29; ஐ.டி., நிறுவன ஊழியர். இவரது வீட்டின் வெளியே இருந்த 'ஏசி'யின் பின்புற சாதனம் மற்றும் காப்பர் குழாய்கள் திருடுபோகின.
ஓட்டேரி போலீசார் விசாரித்து, புளியந்தோப்பு, அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ், 19, பிரேம்குமார், 22, அப்பாஸ், 19, திவாகர், 20, என நால்வரை, நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களை சிறையில் அடைத்தனர்.
ஓட்டுநரை கொல்ல முயன்ற வாலிபர் கைது
முத்தியால்பேட்டை: பிராட்வே, தையப்பன் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஷெரிப், 47; கார் ஓட்டுநர். முன்விரோதம் காரணமாக, கடந்த 6ம் தேதி, முகமது ஷெரிபை கொல்ல முயன்ற, மண்ணடியைச் சேர்ந்த சாதிக் அலி, 45, பைசல் ரகுமான் உட்பட நான்கு பேரை, முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில், தலைமறைவாக இருந்து வந்த ஆலந்துாரைச் சேர்ந்த சத்யநாராயணன், 19, என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
