UPDATED : செப் 21, 2026 10:07 PM
ADDED : செப் 21, 2026 10:03 PM
கொருக்குப்பேட்டை: பொன்னேரியைச் சேர்ந்த 38 வயது பெண், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், 17 வயது மகளுடன், கடந்த 18ம் தேதி காலை மீஞ்சூரில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரயிலில் பயணித்தார். அப்போது ரயிலில் இருந்த நபர், சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். விசாரித்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், எண்ணுார், கத்திவாக்கத்தைச் சேர்ந்த ஏசு, 42, என்பவரை நேற்று கைது செய்தனர்.
* வானகரம் பகுதியில், கடந்த 20ம் தேதி அதிகாலையில் வீட்டின் வெளியே கழிப்பறைக்கு சென்ற 40 வயது பெண்ணை, மறைந்திருந்து கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயன்ற, துண்டலத்தைச் சேர்ந்த சுஷாந்த்குமார், 25 என்ற வாலிபரை, வானகரம் போலீசார், நேற்று கைது செய்தனர்.
* மயிலாப்பூரில், கணவரை இழந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் வசிக்கும், 40 வயது பெண், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை, போலீசார் கைது செய்து, சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். கைது செய்யப்பட்டவர், ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார்.
------------
'ஆவின்' பாலகத்தில் பணம், நெய் திருட்டு
தாம்பரம்: முடிச்சூர், கே.வி.பி., வங்கி அருகே ஆவின் பால் கடை இயங்கி வருகிறது. நேற்று காலை பூட்டு உடைக்கப்பட்டு, பணம் மற்றும் நெய் பாட்டில்கள் திருடப்பட்டிருந்தன. திருடர்களை பீர்க்கன்காரணை போலீசார் தேடி வருகின்றனர்.
-----------
ஐ.டி., ஊழியர் துாக்கிட்டு தற்கொலை
பம்மல்: பம்மல், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த அய்யப்பன், 30; ஐ.டி., ஊழியர். லண்டனில் இருந்து ஐந்து மாதங்களுக்கு முன் இந்தியா வந்த இவர், அதன் பின் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி 10 மாத குழந்தையுடன், மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஆனந்த அய்யப்பனை நண்பர்கள் கோவிலுக்கு அழைத்துள்ளனர். தயாராகி கொண்டிருந்தவர், வீட்டை விட்டு வெளியே வரவில்லை. போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
-------------
மருத்துவமனையில் திருடிய நபர் சிக்கினார்
தி.நகர்: தி.நகர், சீனிவாசன் தெருவைச் சேர்ந்தவர் ரமாமகேஸ்வரி, 54. கடந்த 15ம் தேதி கணவருடன் வடபழனி மருத்துவமனைக்கு சென்றார். கேன்டீனில் உணவு சாப்பிட்டபோது, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 கிராம் நகையுடன், அவரது கைப்பை திருடுபோனது. போலீசாரின் விசாரணையில், தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை குறிவைத்து திருடும், புளியந்தோப்பைச் சேர்ந்த ஜாகிர் உசேன், 52, என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது 15 வழக்குகள் உள்ளன.
--------------
மளிகை கடையில் ரூ.25,000 திருட்டு
மணிமங்கலம்: வரதராஜபுரம், அஷ்டலட்சுமி நகர் 7வது தெருவில் வள்ளி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இக்கடையின் பூட்டை உடைத்து, கல்லா பெட்டியில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருப்பது, நேற்று காலை தெரிய வந்தது. வள்ளி அளித்த புகாரை அடுத்து, மணிங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
-------------
வீட்டு மாடியில் உயிரிழந்த தொழிலாளி
பேசின்பாலம்: சிவராஜபுரத்தைச் சேர்ந்தவர் முனியன், 42. சுவரில் ஓவியம் வரையும் தொழில் செய்து வந்தார். திருமணமாகாத இவர், மது போதைக்கு அடிமையான நிலையில், தங்கை முனிலட்சுமி வீட்டில் அவ்வப்போது தங்கி செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு போதையில் தங்கை வீட்டுக்கு சென்ற முனியன், மொட்டை மாடியில் தங்கை பிள்ளைகளுடன் படுத்திருந்தார். காலையில் அனைவரும் எழுந்து கீழே சென்ற நிலையில், முனியன் மட்டும் ரத்த வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்தார். பேசின்பாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
-----------------------
அடையாளம் தெரியாத ஆண் உடல்கள் மீட்பு
பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரியில், அழுகிய நிலையில் ஆண் உடல் மிதப்பதாக, நேற்று முன்தினம் இரவு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. மேடவாக்கம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன், உடலை உடலை மீட்ட போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.
* நீலாங்கரை: இ.சி.ஆர்., கொட்டிவாக்கம் பகுதியில், சாலையோரத்தில் நேற்று காலை 65 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். நீலாங்கரை போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.
-----------------------
225 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
வடக்கு கடற்கரை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், நேற்று காலை 11:00 மணியளவில் கடற்கரை ரயில்வே போலீசார், புறநகர் ரயில்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, நடைமேடை 2ல் கேட்பாரற்று கிடந்த, 225 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கைப்பற்றினர். அவற்றை, சென்னை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
