UPDATED : செப் 28, 2026 11:29 PM
ADDED : செப் 28, 2026 10:54 PM
ஆட்டோ ஓட்டுநருக்கு வெட்டு: 5 பேர் கைது
தேனாம்பேட்டை: மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார், 29; ஆட்டோ ஓட்டுநர். கடந்த 25ம் தேதி இரவு, தேனாம்பேட்டை, எஸ்.எஸ்.புரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது, முன்விரோதம் காரணமாக, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சந்துரு, 26, சரவணன், 23, திலீப்குமார், 23, விஷ்ணு, 27, ஷியாம், 23 ஆகிய ஐந்து பேர் அவரை சரமாரியாக வெட்டினர்; நந்தகுமார் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேனாம்பேட்டை போலீார் ஐந்து பேரையும் கைது செய்தனர்.
----------------
வழிப்பறி திருடர்கள் இருவர் பிடிபட்டனர்
வியாசர்பாடி: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் இமானுவேல், 21; எலக்ட்ரீஷியன். இவர், நேற்று முன்தினம் காலை 10:00 மணியளவில் மல்லிப்பூ காலனி வழியாக சென்றபோது, மதுபோதையில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார், 19, கிஷோர் குமார், 19 ஆகியோர் இமானுவேலை தாக்கி 1,000 ரூபாய் பறித்து சென்றனர். விசாரித்த வியாசர்பாடி
போலீசார், இருவரையும் நேற்று கைது செய்தனர்.
-----------------
நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த ஆட்டோ
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர், 52; ஆட்டோ ஓட்டுநர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12:45 மணியளவில், இவரது ஆட்டோ தீப்பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு வெளியே வந்த பாஸ்கர், தீயை அணைத்தார்.
-----------------
தீ விபத்தில் டிபன் கடைக்காரர் காயம்
வேளச்சேரி: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 32. வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகரில் தங்கி, தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, உணவு சமைக்க சிலிண்டரை பொருத்தி கொண்டிருந்தார். அப்போது, காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில், சுரேஷின் கை, கால்கள், முகத்தில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
மொபைல் போன் திருடிய வாலிபர் கைது
கோயம்பேடு: கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த கூலி தொழிலாளி ரவிகுமார், 54, என்பவரிடம் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை மொபைல் போன் திருட்டு போனது. விசாரித்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட விக்னேஷ், 23 என்பவரை நேற்று கைது செய்தனர். இவர், கோயம்பேடு பகுதியில் துாங்கிக் கொண்டிருந்த மற்றொரு நபரின் மொபைல் போனையும் திருடியது விசாரணையில் தெரியவந்தது.
விடுதியில் கஞ்சா விற்ற மூவர் கைது
ஜாம்பஜார்: சோழிங்கநல்லுாரில் உள்ள விடுதியில் மூன்று பேர் கஞ்சா விற்பதாக மயிலாப்பூர் துணை கமிஷனர் தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை விடுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டதில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த மகதிஹாசன் பாபு, 25, சுராஜ் பரோய், 21, ஜாஹிதி ஹாசன், 18 ஆகிய மூவரும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், 10 கிலோ கஞ்சா, 400 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
மாமியாரை தாக்கிய போதை மருமகனுக்கு 'காப்பு'
வியாசர்பாடி: வியாசர்பாடி, காமராஜர் தெருவைச் சேர்ந்த தனலட்சுமி, 45. இவரது மகள் சவிதாவின் கணவர் வாசு, 22, கடந்த 22ம் தேதி மது போதையில் தன் 2 வயது குழந்தையை எடுத்து வாசு சென்றுள்ளார். குழந்தையை வாங்க சவிதாவும், தனலட்சுமியும் அவரை பின்தொடர்ந்தனர். ஆத்திரமடைந்த வாசு இரும்பு பைப்பால் தனலட்சுமியின் மண்டையில் தாக்கினார். காயமடைந்த அவர் அளித்த புகாரை அடுத்து ஓட்டேரி போலீசார் வாசுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காதல் தோல்வியால்
வாலிபர் தற்கொலை
மணலி, செப். 29-
மணலி - திரு.வி.க., நகரை சேர்ந்த திபீஸ், 20, பாலிடெக்னிக் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து, இடையில் நின்று விட்டார். நேற்று முன்தினம் இரவு, சாப்பிட்டு விட்டு, படுக்கையறைக்கு உறங்க சென்றார்.
நேற்று காலை, வெகு நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த பெற்றோர், கதவை திறந்து பார்த்தனர். அப்போது, திபீஸ், சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது.
தகவலறிந்த மணலி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்தனர்.
விசாரணையில், திபீஸ், பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதல் தோல்வியான விரக்தியில் இருந்துள்ளார். கடந்த வாரம், அவரது நண்பர் திடீரென உயிரிழந்ததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானவர், தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறினர்.
சிறுமியிடம் பாலியல் சீண்டல் - கைதுக்கு பயந்து மீனவர் தற்கொலை
எண்ணுார், செப். 29-
எண்ணுாரில், மீனவரான அன்பானந்தம், 46, என்பவர், எட்டு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், கைது நடவடிக்கைக்கு பயந்து, துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
சென்னை, எண்ணுாரை சேர்ந்த அன்பானந்தம், 46, மீனவர். நேற்றிரவு மதுபோதையில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது, அதே பகுதியில் உறவினர் வீட்டிற்கு வந்த, எட்டு வயது சிறுமியிடம், அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து, தகவலறிந்த, சிறுமியின் உறவினர்கள் அங்கு வந்து, அன்பானந்தத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். கல்லை எடுத்து அடித்ததில், மண்டை உடைந்து ரத்தம் வழிந்துள்ளது. ஆத்திரமடங்காத உறவினர்கள், காவல் நிலையம் சென்று புகார் அளிக்க போவதாக கூறி, சென்றுள்ளனர்.
இந்நிலையில், கைது நடவடிக்கைக்கு பயந்து போன அன்பானந்தம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தகவலறிந்த, எண்ணுார் போலீசார், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
போலீசாரை தாக்க
முயன்ற 3 பேர் கைது
சூளைமேடு, செப். 29-
விசாரணைக்கு சென்ற போலீசாரை தாக்க முயன்ற, இருவர் கைது செய்யப்பட்டனர்.
சூளைமேடு, நீலகண்ட தெருவில் உள்ள, மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும், 'ஆன்லைன்' நிறுவனத்தின் கிடங்கில் உள்ள பொருட்கள் தரமற்றவை என்றும், ஊழியர்கள் குறித்தும் அப்பகுதி மக்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதையடுத்து, கிடங்கு மேலாளர் புகழேந்தி, குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்ட காமராஜ், 33, ஸ்டீபன் ராஜ், 31, ஆகியோரை நேற்று விசாரித்தார். அப்போது போதையில் இருந்த இருவரும் அவரிடம் தகராறு செய்தனர். அங்கு சென்ற சூளைமேடு போலீசார் சக்திவேல், பிரபாகரன் ஆகியோரிடம் விசாரித்தபோது, இருவரும் அவர்களின் சட்டையை பிடித்து தாக்க முயன்றனர். இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
* வியாசர்பாடி, புதுநகரைச் சேர்ந்த கவுதம் என்ற அப்புனு, 33; ரவுடி. இவரது மனைவி விஜயசாந்தி, தன்னையும், குழந்தைகளையும் கணவர் அடித்து துன்புறுத்துவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, உதவி ஆய்வாளர் அர்ஜுன் விசாரணைக்கு சென்றார். வியாசர்பாடி பாலம் அருகே மது போதையில் படுத்திருந்த கவுதமிடம் விசாரித்தார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில்,எஸ்.ஐ., அர்ஜுனை கவுதம் தாக்கியதாக கூறப்படுகிறது. வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
