UPDATED : அக் 05, 2026 10:35 AM
ADDED : அக் 04, 2026 09:56 PM

ரூ.7.50 லட்சம் மோசடி: கட்டட ஒப்பந்ததாரர் கைது
வியாசர்பாடி: எம்.கே.பி., நகரைச் சேர்ந்தவர் ராதிகா, 34. வீட்டின் மாடியில் புதிய வீடு கட்டுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலகிருஷ்ணன், 39, என்பவரிடம் ஒப்பந்தம் செய்து, ஓராண்டுக்கு முன் 7.50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், ஒப்பந்தப்படி வீடு கட்டித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் பாலகிருஷ்ணன் ஏமாற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் ராதிகா அவரது வீட்டுக்குச் சென்று பணத்தை கேட்டபோது, தகராறு செய்து துப்பட்டாவை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார். புகாரின்படி, எம்.கே.பி., நகர் போலீசார் பாலகிருஷ்ணனை நேற்று கைது செய்தனர்.
ரயிலில் ‘லேப்டாப்’ திருடியவர் சிக்கினார்.
எண்ணுார்: திருவள்ளூர் மாவட்டம், அனுப்பம்பட்டைச் சேர்ந்தவர் சுகுமார், 25; ஐ.டி., ஊழியர். செப்., 16ம் தேதி, விம்கோ நகரில் இருந்து அனுப்பம்பட்டு செல்ல, சூலுார்பேட்டை மின்சார ரயிலில் பயணித்தார். லக்கேஜ் வைக்கும் இடத்தில் வைத்திருந்த லேப்டாப் பை, எண்ணுார் சென்றபோது மாயமானது. விசாரித்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், திருட்டில் ஈடுபட்ட எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பிரகாஷ் என்ற அப்பு, 42, என்பவரை நேற்று கைது செய்து, ‘லேப்டாப்’பை பறிமுதல் செய்தனர்.
வீடு புகுந்து பெண்ணிடம் செயின் பறிப்பு
படப்பை: மாடம்பாக்கம், வள்ளலார் நகரைச் சேர்ந்த கோபிநாத் மனைவி பொற்கொடி, 34. இவர், நேற்று முன்தினம் இரவு, காற்று வசதிக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்கினார். அதிகாலை 4:00 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், பொற்கொடியின் 3.5 சவரன் தாலி செயினை பறித்தார். சத்தம் கேட்டு பொற்கொடி கூச்சலிட்டதால், மர்ம நபர் செயினுடன் தப்பினார். மணிமங்கலம் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
ஸ்கூட்டர் திருடிய பழைய குற்றவாளி கைது
தண்டையார்பேட்டை: சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர், 67. செப்., 25ம் தேதி வீட்டின் முன் தன், ‘டியோ’ ஸ்கூட்டரை நிறுத்தி சென்றார். மறுநாள், ஸ்கூட்டர் திருடு போயிருந்தது. விசாரித்த தண்டையார்பேட்டை போலீசார், திருட்டில் ஈடுபட்ட நல்லப்ப வாத்தியார் தெருவைச் சேர்ந்த சூர்யா, 27, என்பவரை நேற்று கைது செய்து, ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். சூர்யா மீது ஏற்கனவே கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன.
வெளிமாநில மது பதுக்கி விற்ற நபருக்கு ‘காப்பு’
கோயம்பேடு: கோயம்பேடு, எலுமிச்சை சந்தை கேட் அருகே, நேற்று முன்தினம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனம் அருகே பையுடன் சந்தேகமாக நின்ற, விருகம்பாக்கம் வெங்கடேஷ் நகரைச் சேர்ந்த ஆல்பர்ட் ராஜ், 45, என்பவரை பிடித்து சோதனை செய்தனர். பையில், புதுச்சேரியில் இருந்து வாங்கி வரப்பட்ட 31 மதுபாட்டில்கள் இருந்தன. கூலி வேலைக்கு வருவோரிடம் அதிக விலைக்கு விற்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மதுபாட்டில்கள், 1,300 ரூபாய் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மனைவி மீது தாக்கு: ‘சந்தேக’ கணவருக்கு சிறை
புழல்: புழல் அடுத்த, காவாங்கரை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் நகுலன், 45. இவரது மனைவி ஷோபா, 40. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த நகுலன், நேற்று முன்தினம் மதுபாட்டிலால் ஷோபா தலையில் தாக்கினார். காயமடைந்த ஷோபா, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். மருத்துவமனை தகவலின்படி, புழல் போலீசார் நகுலனை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
வீடு புகுந்து மிரட்டிய கொத்தனாருக்கு ‘கம்பி’
கொடுங்கையூர்: கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகர், ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் கருவேல்ராஜ், 47. இவரது வீட்டின் அருகே வசிப்பவர் சக்திவேல், 40; கொத்தனார். இவர், மது அருந்துவதற்காக கருவேல்ராஜிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். சில நாட்களாக கருவேல்ராஜ் பணம் தராததால் ஆத்திரமடைந்த சக்திவேல், கடந்த 2ம் தேதி இரவு வீட்டிற்குள் புகுந்து, கருவேல்ராஜை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கஞ்சா, போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
வியாசர்பாடி: வியாசர்பாடி, நேரு நகர் சந்திப்பு பகுதியில் வியாசர்பாடி போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில், கஞ்சா இருப்பது தெரிந்தது. காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர் வியாசர்பாடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 19, என, தெரியவந்தது. அவரிடம் இருந்து 260 கிராம் கஞ்சா, ஐந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டன். போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
