UPDATED : ஜூலை 16, 2026 09:43 PM
ADDED : ஜூலை 16, 2026 09:31 PM
அரும்பாக்கம்: பிராட்வேயில் இருந்து எம்.எம்.டி.ஏ., காலனி செல்லும் வழித்தடம் எண்: '15ஜி' பேருந்தில், ஜூலை 16 காலை நடத்துநர் சதிஷ்குமார், 40, பணியில் இருந்தார். என்.எஸ்.கே., பேருந்து நிறுத்ததில் ஏறிய கோயம்பேடை சேர்ந்த கண்ணன், 48 என்பவர், 10 ரூபாய் கொடுத்து, 6 ரூபாய்க்கான டிக்கெட் வாங்கியுள்ளார். நடத்துநர் சில்லரை கேட்டதால், ஆத்திரமடைந்த கண்ணன், நடத்துநரிடம் வீண் தகராறு செய்து தாக்கியுள்ளார். அரும்பாக்கம் போலீசார் கண்ணனை கைது செய்தனர்.
பாடி புதுநகரைச் சேர்ந்த செல்வி, 58, மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம், வீட்டு மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பைக் ரேஸில் ஈடுபட்ட இருவர் கைது
மயிலாப்பூர்: அடையாறு, இந்திரா நகர் ரயில் நிலையத்திலிருந்து மத்திய கைலாஷ் நோக்கி பைக் ரேஸ் அடாவடியில் ஈடுபட்ட, சைதாப்பேட்டையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், 22, முகமது உசைன், 22, ஆகிய இருவரை, மயிலாப்பூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 'கவாசாகி - 900' பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
வாலிபரை தாக்கிய ஓட்டுநர் கைது
வேளச்சேரி: வேளச்சேரி, தேரடி தெருவை சேர்ந்தவர் கார்த்திக், 28. வீட்டில் நாய் வளர்க்கிறார். பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முருகன், 26. கார் ஓட்டுநர். நேற்று முன்தினம் இரவு, போதையில் இருந்த இவர், கார்த்திக் வளர்க்கும் நாயை பார்த்து திட்டி உள்ளார். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த கார்த்திக்கின் மனைவி சங்கீதாவை, தரக்குறைவாக பேசிய முருகன், தட்டிக்கேட்ட கார்த்திக்கை தாக்கியுள்ளார். வேளச்சேரி போலீசார், முருகனை கைது செய்தனர்.
**
டாக்டரின் பணத்தை திருடியவர் கைது
கோட்டூர்புரம்: மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ரோஹிணி தத்தாத்ரேய கித்துாரே, 43; டாக்டர். சென்னை ஐ.ஐ.டி., சர்வதேச மாநாட்டில் பங்கேற்க வந்தார். 14ம் தேதி இரவு, அவரது பையில் இருந்த 3,500 ரூபாய் திருடு போனது. விசாரித்த கோட்டூர்புரம் போலீசார், மாநாட்டில் பங்கேற்ற விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த எம்.எஸ்சி., பட்டதாரியான அம்ரீஷ் பிரகாஷ், 37, என்பவரை கைது செய்தனர்.
***
வீட்டின் உரிமையாளரை தாக்கியவர்கள் கைது
புளியந்தோப்பு: திரு.வி.க., நகர் மண்டலத்தில் துாய்மை பணியாளராக பணிபுரிபவர் சித்தாளி, 22. இவரது வீட்டில் நவ்ஷாத், 19, தேவராஜ், 19, தீபக் ஆகியோர் வாடகைக்கு குடியிருக்கின்றனர். அதீத மதுபோதையில் நேற்று முன்தினம் இரவு பைக்கில் 'ஹாரன்' சத்தம் எழுப்பி தகராறு செய்துள்ளனர். இதை தட்டிக்கேட்ட சித்தாளியை, மூவரும் சேர்ந்து தாக்கினர். பேசின்பாலம் போலீசார் இருவரை நேற்று கைது செய்த நிலையில், தலைமறைவான தீபக்கை தேடி வருகின்றனர்.
***
வழிப்பறி ரவுடிகள் கைது
ஓட்டேரி: ஓட்டேரியில், ராஜ்கமல், 36, என்பவரை தாக்கி பணம் பறித்த வழக்கில், பெரவள்ளூரைச் சேர்ந்த சாமுவேல், 26, செங்குன்றத்தைச் சேர்ந்த பால் பிரவீன், 31, ஆகிய இரு ரவுடிகளை ஓட்டேரி போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
***
பைக் திருடன் கைது
மாதவரம்: மாதவரம், புழல், விநாயகபுரம் பகுதிகளில் நடந்த பைக் திருட்டு வழக்கில், திருட்டு பைக்குடன் சிக்கிய புளியந்தோப்பைச் சேர்ந்த 'வாணவெடி' சூர்யா, 23, என்பவரை மாதவரம் போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து யமஹா பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
***
கால்வாய்க்குள் விழுந்தவர் மீட்பு
பாடி: பாடி: பாடி, புதுநகரைச் சேர்ந்த பாபு, 45, மது போதையில் கூவம் ஆற்றின் 15 அடி ஆழ இணைப்பு கால்வாயில் விழுந்து தலையிலும் காலிலும் பலத்த காயமடைந்தார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டனர், முதலுதவி அளித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
***
லாரியில் சிக்கி வேரோடு சாய்ந்த மரம்
ஓட்டேரி: ஓட்டேரியில், 'ஹோண்டா' இருசக்கர வாகனங்களை ஏற்றிச் சென்ற லாரியில் வாகை மரக்கிளை சிக்கியதால் மரம் வேரோடு சாய்ந்தது. அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ சேதமடைந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் மரத்தை அகற்றினர்.
