UPDATED : ஜூலை 16, 2026 09:54 PM
ADDED : ஜூலை 16, 2026 08:52 PM
குன்றத்துார்: மது போதையில் ஏற்பட்ட தகராறில், தலையில் கல்லை போட்டு நண்பனை கொலை செய்த கூட்டாளிகள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 34; கூலி தொழிலாளி.
இவர், நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த கால்டாக்சி ஓட்டுநர் ஆனந்தஜோதி, 32, தங்கம், 44, ஆகியோருடன் சேர்ந்து, சேத்துப்பட்டு - சோமங்கலம் சாலையில் உள்ள காலி நிலத்தில், ஜூலை 15ல் மது அருந்தினார்.
மது போதையில் இருந்த ராஜேஷ், நண்பர்கள் இருவரின் குடும்பத்தினரை பற்றி அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்தஜோதி, தங்கம் ஆகிய இருவரும் சேர்ந்து, ராஜேஷை தாக்கி கீழே தள்ளினர். பின், அங்கு கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்துள்ளனர்.
ஜூலை 16 காலை போதை தெளிந்ததும், இருவரும், சோமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று, ராஜேஷை கொலை செய்ததாக சரணடைந்தனர். உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். இந்த கொலையில் வேறு காரணங்கள் உள்ளனவா என, இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
