/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாராயணபுரம் ஏரியில் கழிவுநீர் கலப்பால் அபாயம்
/
நாராயணபுரம் ஏரியில் கழிவுநீர் கலப்பால் அபாயம்
ADDED : மே 13, 2025 12:40 AM

கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு கொளத்துார் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், திறந்தவெளி கால்வாய் வழியாக ஏரியில் நேரடியாக கலப்பதால் நீர் மாசடைந்து வருகிறது. இதை, உடனடியாக தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புனித தோமையார் மலை ஒன்றியத்தில் கோவிலம்பாக்கம், சுண்ணாம்புக் கொளத்துார் ஊராட்சி அமைந்துள்ளது. அங்கு, 40க்கும் மேற்பட்ட நகர்களும், 100க்கும் மேற்பட்ட தெருக்களும் உள்ளன. 70,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டம் இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தொட்டி கட்டி லாரிகள் வாயிலாகவே அகற்றப்படுகிறது. பெரும்பாலான வீடுகளின் கழிப்பறை கழிவுநீர் மட்டுமே அந்த முறையில் அகற்றப்படுகின்றன.
மற்றபடி குளியல், சமையல், துணி துவைக்கும் கழிவுநீர் அனைத்தும் வீடுகளுக்கு வெளியில் செல்லும் திறந்த வெளி மழைநீர் கால்வாயிலேயே விடப்படுகிறது.
கடந்த ஆண்டு முதல்வர் நிதியின் கீழ், திறந்தவெளி மழைநீர் வடிகால் கால்வாய், சுண்ணாம்பு கொளத்துார், இந்திரபுரி, விடுதலை நகர், ராஜம் நகர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டது. அது இறுதியாக நாராயணபுரம் ஏரியில் இணைக்கப்பட்டுள்ளது.
அப்போதே பொதுமக்கள் திரண்டு, அதை மூடுகால்வாயாக அமையுங்கள் இல்லாவிடில் பலவிதமான ஆபத்துகள் நேரக கூடும் என்று வற்புறுத்தினர். ஆனால், சம்பந்தப்பட்ட ஒன்றியத்தினர் கண்டுக்கொள்ளவில்லை.
அந்த கால்வாய்களில் வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள், கால்நடைகள் அடிக்கடி விழுந்து பாதிக்கப்படுகின்றன. தற்போது அந்த கால்வாயில், வீடுகளின் கழிவுநீர் நேரடியாக ஏரியில் சென்று கலக்கிறது.
இதனால், மழைநீர் சேகரிக்க வேண்டிய ஏரி, கழிவுநீரை சேகரித்து வருகிறது. இதே நீலை நீடித்தால் சுற்றுவட்டாரப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் கள ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- நமது நிருபர் -