ADDED : ஜூலை 21, 2025 03:14 AM

எண்ணுார்,:'பகிங்ஹாம் கால்வாயில் மிதக்கும் எண்ணெய் படலத்தால், எண்ணுார் முகத்துவாரத்தில் மீன் வளம் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது' என, மீனவர்கள் தெரிவித்தனர்.
எண்ணுாரில், ஆறும் - கடலும் இணையும் முகத்துவார பகுதி உள்ளது. இங்கு, புழல் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் உபரி நீரும், பகிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறும் நீரும், கடலில் கலக்கும் வகையில் அமைப்பு உள்ளது.
கடலின் உப்பு நீரும் - ஆற்றின் நன்னீரும் இணையும், முகத்துவார பகுதி, இறால், மீன் மற்றும் நண்டு உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவான இடமாக விளங்கி வருகிறது.
எண்ணுார், காட்டுக்குப்பம், சிவன்படை வீதிகுப்பம், நெட்டுகுப்பம், தாழங்குப்பம், எண்ணுார் குப்பம், முகத்துவார குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம் ஆகிய எட்டு மீனவ கிராமங்களைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான மீனவர்கள், முகத்துவாரத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
அவ்வப்போது பகிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறும் எண்ணெய் கழிவுகளால், முகத்துவார பகுதியில் மீன் வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, மாசு கட்டுப்பாட்டு வரியம் எந்த ஆய்வும் மேற்கொள்வதில்லை என, மீனவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இரு நாட்களாக எண்ணுார் கமலாம்மாள் நகர், காட்டுப்குப்பத்தில், பகிங்ஹாம் கால்வாயில் எண்ணெய் கழிவு படர்ந்திருந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

