/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சித்தேரியில் செத்து மிதக்கும் மீன்கள்
/
சித்தேரியில் செத்து மிதக்கும் மீன்கள்
ADDED : செப் 23, 2025 01:35 AM

சேலையூர்:சேலையூர் அடுத்த வேங்கைவாசல் சித்தேரியில், மீன்கள் செத்து மிதப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதியில் தொற்று நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சேலையூர் அடுத்த வேங்கைவாசலில், 25 ஏக்கர் பரப்பளவு உடைய சித்தேரி உள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, முறையான பராமரிப்பு இல்லாததால் சீரழிந்துவிட்டது.
சுடுகாடு, வேங்கைவாசல் பிரதான சாலை, பெரிய ஏரி - சித்தேரி கால்வாய் ஆகிய மூன்று வழிகள் வழியாக, இந்த ஏரியில் கழிவுநீர் கலக்கிறது. பல ஆண்டுகளாக கழிவுநீர் கலப்பதால், ஏரி நீர் நாசமடைந்து, நிறம் மாறி துர்நாற்றம் வீசுகிறது. மற்றொரு புறம், ஏரியினுள் ஆகாயத்தாமரை வளர்ந்து, பாதி பகுதியை மூடிவிட்டது.
இந்நிலையில், இந்த ஏரியில் மீன்கள் கொத்துக்கொத்தாக செத்து மிதக்கின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. நடைபயிற்சி செல்வோருக்கு தொற்று நோய் பரவும் சூழல் அதிகரித்துள்ளது.
அதனால், செத்து மிதக்கும் மீன்களை அகற்றி, ஏரியை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.