/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முககவசம் அணியாத நாய்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்க முடிவு நாய்களை பறிமுதல் செய்யவும் மாநகராட்சி திட்டம்
/
முககவசம் அணியாத நாய்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்க முடிவு நாய்களை பறிமுதல் செய்யவும் மாநகராட்சி திட்டம்
முககவசம் அணியாத நாய்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்க முடிவு நாய்களை பறிமுதல் செய்யவும் மாநகராட்சி திட்டம்
முககவசம் அணியாத நாய்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்க முடிவு நாய்களை பறிமுதல் செய்யவும் மாநகராட்சி திட்டம்
ADDED : மார் 19, 2025 12:16 AM

சென்னை, முககவசம் அணியாமல் வளர்ப்பு நாய்களை வெளியில் அழைத்து வந்தால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தவிர, அந்நாய்களை பறிமுதல் செய்யவும் ஆலோசித்து வருகிறது.
சென்னையில் வளர்ப்பு நாய்களை, காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சிக்கு அழைத்து வரும்போது, அவற்றுக்கு வாய்மூடியான முககவசம் அணிவது கட்டாயம்.
சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், நாய்களை வெளியே அழைத்து வர வேண்டும். மேலும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், மாநகராட்சியின் பதிவு உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.
வளர்ப்பு நாய்கள், பொதுமக்களை கடித்தால், அதற்கு உரிமையாளர் தான் பொறுப்பேற்க வேண்டும்.
இதன் வாயிலாக, உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநகராட்சி விதித்துள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பின்பற்றாமல், வளர்ப்பு நாய்களை கொண்டு வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தாலும், நாய் வளர்ப்போர் அவற்றை பின்பற்றுவதில்லை.
இவற்றால், சாலையில் செல்வோரை சில நேரங்களில் வளர்ப்பு நாய்கள் கடித்து குதறி வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனால், முககவசம் அணியாமல், சாலைக்கு அழைத்து வரப்படும் வளர்ப்பு நாய்களுக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் தெருநாய்கள் கட்டுப்படுத்துவது முதல், வளர்ப்பு நாய்களுக்கான கட்டுப்பாடுகள் வரை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதுடன், 'மைக்ரோசிப்' பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. இதுவரை, 4,000 தெரு நாய்களுக்கு, 'மைக்ரோ சிப்' பொருத்தப்பட்டுள்ளது.
அதேபோல், வளர்ப்பு நாய்கள் வளர்ப்போர், மாநகராட்சியில் பதிவு செய்வது கட்டாயம். பலர் பதிவு செய்யாமல் உள்ளனர்.
இதுபோன்ற பதிவு செய்யாத நாய்கள் கண்டறியப்பட்டால், அவற்றை பறிமுதல் செய்யவும் மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.
அதேபோல், முககவசம் அணியாமல் இருந்தால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறையும் விரைவில் அமலுக்கு வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.