தகவல் வழங்குவதில் தாமதம்: ரூ.2,000 இழப்பீடு வழங்க டி.ஆர்.ஓ.,விற்கு உத்தரவு
தகவல் வழங்குவதில் தாமதம்: ரூ.2,000 இழப்பீடு வழங்க டி.ஆர்.ஓ.,விற்கு உத்தரவு
ADDED : மார் 26, 2026 11:31 PM
சென்னை: 'உரிய காலத்தில் தகவல் வழங்காமல் அலைக்கழித்ததற்காக, மனுதாரருக்கு 2,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, டி.ஆர்.ஓ.,விற்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் அக்பர் அகமது. இவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சென்னை கலெக்டர் அலுவலகத்தில், கடந்த 2022 ஆக., மாதம், நிலம் தொடர்பான சில தகவல்களை கோரி விண்ணப்பித்துள்ளார்; நீண்ட நாட்களாகியும் முறையான தகவல் வழங்கப்படவில்லை.
இது குறித்து, மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை மாநில தகவல் ஆணையர் தாமரைக்கண்ணன் விசாரித்தார்.
இதற்கு, கலெக்டர் அலுவலகம் சார்பில், மனுதாரர் கோரிய தகவல்கள் அடங்கிய கோப்பு, அலுவலகத்தில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
மேலும், மனு அளிக்கப்பட்ட காலத்தில், சென்னை கலெக்டரின் நேர்முக உதவியாளர் நிலம் பிரிவுக்கான பணியிடம் மற்றும் 'பொதுத் தகவல் அலுவலர்' பணியிடம் காலியாக இருந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த தகவல் ஆணையர் தாமரைக்கண்ணன், பிறப்பித்துள்ள உத்தரவில் உள்ளதாவது:
பணியிடம் காலியாக இருந்தாலும், அந்த பொறுப்பை தகுந்த மற்றொரு அலுவலருக்கு வழங்கி, தகவல்களை வழங்கியிருக்க வேண்டும். மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக, சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் தரப்பிலிருந்து, 2,000 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.
இந்த தொகையை, ஏப்., 27க்குள் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மனுதாரருக்கு பிரமாண பத்திரம் வழங்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
