டெலிவரி கட்டணம் ரூ.40 ஆக குறைப்பு ‘அமேசான்’ ஊழியர்கள் பணி புறக்கணிப்பு
டெலிவரி கட்டணம் ரூ.40 ஆக குறைப்பு ‘அமேசான்’ ஊழியர்கள் பணி புறக்கணிப்பு
ADDED : செப் 28, 2026 10:55 PM
அம்பத்துார்: டெலிவரி கட்டணம் குறைக்கப்பட்டதைக் கண்டித்து, அம்பத்துாரில், ‘அமேசான் டெலிவரி’ ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பத்துார், வெங்கடபுரம் பகுதியில் அமேசான் நிறுவனத்துடன் தொடர்புடைய குடோன் உள்ளது. இங்கு, 55க்கும் மேற்பட்டோர் டெலிவரி ஊழியர்களாக பணியாற்றுகின்றனர்.
முதலில், இவர்களுக்கு நாள் சம்பளமாக, 900 ரூபாய்; ஒரு டெலிவரிக்கு, 60 ரூபாய் வழங்கப்பட்டது. ஒன்றரை மாதங்களுக்கு முன், 50 ரூபாயாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், ஒரு ஆர்டருக்கு, 40 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள், நேற்று பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வரை டெலிவரி செய்ய முடியாமல் தேங்கியதாக கூறப்படுகிறது.
வெங்கடபுரம் கிளை குழு நிர்வாகிகள் மற்றும் அம்பத்துார் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். மேலதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, நான்கு மணி நேரம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
***
