ADDED : செப் 28, 2024 12:30 AM

கொரட்டூர்,கொரட்டூர் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை, அதிகாரிகள் நேற்று, போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர்.
அம்பத்துார் அருகே, கொரட்டூர் ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாக புகார் வந்தது.
இதையடுத்து, வருவாய்த்துறையினர் கணக்கெடுப்பு நடத்தினர். அதில், 20 வீடுகள் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டது என்பது தெரிந்தது.
இதையடுத்து, செங்குன்றம் நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் கவுரிசங்கர், அம்பத்துார் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று, ஆக்கிரமிப்பு பகுதிக்கு சென்றனர். பின், பொக்லைன் இயந்திரம் வாயிலாக 20 வீடுகளை இடித்து அகற்றினர்.
அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த மாதம் ஆக்கிரமிப்பு அகற்ற சென்றபோது, ஆவணங்கள் இருப்பதாகக்கூறி சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏரி இடம் என எடுத்துக்கூறி, வீடு காலி செய்ய அவகாசம் கொடுத்தோம். அவர்கள் கண்டுகொள்ளாததால், வீடுகளை இடித்து உள்ளோம்' என்றனர்.
வீட்டை இழந்த ப்ரியதர்ஷினி கூறுகையில், ''இந்த இடம் சர்வே எண்: 810ல் வீட்டு மனையாக உள்ளது. மொத்தம் 50 மனைகளில் 20 மனைகளை வாங்கி, பலர் வீடு கட்டியுள்ளனர். பட்டா வாங்கி, வரி இனங்கள் செலுத்துகிறோம். இப்போது வந்து இடிக்கின்றனர்,'' என்றார்.