/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ.சி.ஆர்., விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு
/
இ.சி.ஆர்., விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு
இ.சி.ஆர்., விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு
இ.சி.ஆர்., விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு
ADDED : நவ 15, 2024 12:50 AM

சென்னை, சென்னையின் முக்கிய சாலையான இ.சி.ஆர்., என்ற கிழக்கு கடற்கரை சாலையில் வாகன நெரிசலை கணக்கில் கொண்டு, திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
மொத்தம், 10 கி.மீ., துாரத்தில், நான்கு வழியை ஆறு வழியாக மாற்றும் பணி, 2012ம் ஆண்டு துவங்கியது. வழக்கு, நிர்வாக குளறுபடி காரணமாக ஆமை வேகத்தில் நடந்த பணி, ஓராண்டாக வேகமாக நடக்கிறது.
இதில், பட்டா மற்றும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. உரிய இழப்பீடு வழங்கி, பட்டா இடம் சாலைக்காக கையகப்படுத்தப்படுகிறது. அதேபோல், ஆக்கிரமிப்பும் அகற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நீலாங்கரை சந்திப்பில், சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக, 200 மீட்டர் நீளம், 10 முதல் 18 அடி அகலம் வரை ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இருந்தன.
வருவாய் துறை அளவீடு செய்து கொடுத்த, ஆக்கிரமிப்பில் இருந்த 15 கட்டடங்களை, போலீஸ் பாதுகாப்புடன் நேற்று, நெடுஞ்சாலைத் துறை இடித்தது.
கட்டடங்களில் இருந்த மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, கம்பங்கள் நகர்த்தி நடும் பணி நடக்கவுள்ளது.
ஆக்கிரமிப்புகளை இடிக்கும் வாகனங்கள் சாலையில் நின்று பணி செய்ததால், நீலாங்கரை முதல் பாலவாக்கம் வரை, 2 கி.மீ., துாரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நில ஆர்ஜிதம் பணி, 90 சதவீதம் முடிந்தது. ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி பகுதியில், 600 மீட்டர் துாரத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவை, அடுத்தடுத்து அகற்றப்படும்.
மீட்கப்பட்ட இடங்களில், வடிகால் கட்டி, சாலை அகலப்படுத்தப்படுகிறது. 60 சதவீதம் இடங்களில், ஆறு வழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளன.
மூன்று மாதங்களில் அனைத்து பணிகளும் முடிக்கும் வகையில், நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.