/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் தினமும் 30 பேருக்கு மேல் பாதிப்பு மீண்டும் 'டெங்கு' மாநகராட்சி அலட்சியத்தால் கொசு தொல்லை அதிகரிப்பு
/
சென்னையில் தினமும் 30 பேருக்கு மேல் பாதிப்பு மீண்டும் 'டெங்கு' மாநகராட்சி அலட்சியத்தால் கொசு தொல்லை அதிகரிப்பு
சென்னையில் தினமும் 30 பேருக்கு மேல் பாதிப்பு மீண்டும் 'டெங்கு' மாநகராட்சி அலட்சியத்தால் கொசு தொல்லை அதிகரிப்பு
சென்னையில் தினமும் 30 பேருக்கு மேல் பாதிப்பு மீண்டும் 'டெங்கு' மாநகராட்சி அலட்சியத்தால் கொசு தொல்லை அதிகரிப்பு
UPDATED : ஜூலை 25, 2025 04:05 PM
ADDED : ஜூலை 24, 2025 11:59 PM

சென்னை: சென்னையில் சத்தமே இல்லாமல், 'டெங்கு' காய்ச்சல் அதிகரித்து, தினமும் 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தாண்டில் இதுவரை, 520 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 35 வயதுக்கு உட்பட்டோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கு, கொசுத் தொல்லை அதிகரிப்பும், மாநகராட்சியின் அலட்சியமுமே காரணம் என, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கோடை முடிந்தாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. பகல் நேரங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. மாலை நேரங்களில், அவ்வப்போது திடீரென மழை பெய்கிறது. இந்த பருவநிலை மாற்றத்தாலும், திடீர் மழையாலும் டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ்' கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
மாநகரின் பல பகுதிகளில், திறந்தவெளி இடங்கள் குப்பை கொட்டும் இடங்களாகவும், முறையாக பராமரிக்காத இடங்களாகவும் உள்ளன.
520 பேர் அங்கு தேங்கும் மழைநீரான நன்னீரில், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. சில இடங்களில், சில ஆண்டுகளுக்கு முன் இடப்பட்ட முட்டை இருக்கும் பகுதியில் நன்னீர் தேங்கும்போது, அவை லார்வாக்களாக உருவாகி, கொசுவாக உற்பத்தியாகிறது.
இவற்றால், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் அதிகரித்து, பகலிலும் மனிதர்களை கடித்து, டெங்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சென்னையில், டெங்கு காய்ச்சலால் தினமும் 25 முதல் 30 பேர் பாதிக்கப்படுவது, பதிவுகள் வாயிலாக தெரிய வந்துள்ளது. நேற்று, 26 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில், 12 பேர், 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் - சிறுமியர்.
இது, மாநகராட்சியில் பதிவான விபரங்கள் தான். பதிவு இல்லாமலும், ஆங்காங்கே பலர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சில மண்டலங்களில், டெங்கு காய்ச்சலால் இறப்பு நடந்துள்ளது. அவற்றை மாநகராட்சி மறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்தாண்டு ஜூலை வரை, 380 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டில் இதுவரை, 520 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தரமற்ற கொசு மருந்து அடிப்பதால், கட்டுப்படாமல் கொசு உற்பத்தி அதிகமாகியுள்ளது. அதனால் கொசு தொல்லை அதிகரித்ததும், மாநகராட்சியின் அலட்சியமுமே, டெங்கு பாதிப்பு அதிகரிக்க காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
வரும் காலங்களில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளதால், கொசு ஒழிப்பு பணிகளில், மாநகராட்சி தீவிரம் காட்ட வேண்டும் என, மக் கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சவாலாக உள்ளது
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில், 3,400 கொசு ஒழிப்பு ஊழியர்கள், 220 இயந்திரங்கள் மற்றும் 830 விசை தெளிப்பான் வாயிலாக, கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நீர்நிலைகளில், ட்ரோன்கள் வாயிலாக மருந்து தெளிக்கப்படுகிறது. எவ்வளவு தடுப்பு பணி மேற்கொண்டாலும், அடர்த்தியாக வளரும் பகுதியில், கொசுவை அழிப்பதில் சவால் அதிகமாக உள்ளது.
வெயிலுடன், அவ்வப்போது மழை பெய்வதால், கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. நீர்நிலை பகுதிகளை ஒட்டி வசிப்போர் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இருந்தும் எங்களையும் மீறி நடக்கிறது.
தற்போது, முகாம் போன்ற பணிகளில், கொசு ஒழிப்பு ஊழியர்களை பயன்படுத்துவதால், கொசு ஒழிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், முடிந்த அளவு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.