/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டெங்கு... வேகமாக பரவுது இரு மாதங்களில் மேலும் உயருமென எச்சரிக்கை
/
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டெங்கு... வேகமாக பரவுது இரு மாதங்களில் மேலும் உயருமென எச்சரிக்கை
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டெங்கு... வேகமாக பரவுது இரு மாதங்களில் மேலும் உயருமென எச்சரிக்கை
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டெங்கு... வேகமாக பரவுது இரு மாதங்களில் மேலும் உயருமென எச்சரிக்கை
ADDED : அக் 24, 2025 11:23 PM

வடகிழக்கு பருவமழை தீவிரமாகும் நிலையில், சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் 'டெங்கு' பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. தினமும் 10 என்ற எண்ணிக்கையில் இருந்த பாதிப்பு, 60க்கும் மேல் பதிவாகி வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் பாதிப்பு, இரட்டிப்பாகும் என்பதால், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என, பொது சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ் - எஜிப்டை' வகை கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி, நோய்களை பரப்பி வருகின்றன.
முன்பெல்லாம் பருவமழைக்கு முன், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், பொது இடங்கள், வீடுகள், திறந்தவெளி இடங்களில் காணப்படும் பழைய பொருட்களை அகற்றி சுத்தப்படுத்தினர்.
ஆனால், கொரோனா காலத்துக்கு பின், டெங்கு மீதான நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தவில்லை. இதனால், பருவமழை காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக, சென்னையில் 30 பேர்; திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 30 பேர் என, தினமும் 60க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபரங்கள் பொது சுகாதாரத்துறையில் பதிவான விபரம்தான். முறையான பதிவு இல்லாமல், ஆங்காங்கே சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறோம் என, சென்னை மாநகராட்சி களமிறங்கியுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மழை காரணமாக, டெங்கு, இன்ப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பு உள்ளது. ஆனால், வழக்கமாக தினமும் 70 பேர் என்ற எண்ணிக்கையைவிட பாதிப்பு குறைவுதான். இந்தாண்டில் 1,000க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது, சென்னையை பொறுத்தவரையில், அம்பத்துார், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி, ராயபுரம் மண்டலங்களில் டெங்குவின் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளின் அருகாமையில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும். மேலும், வீட்டில் உள்ள, 'பிரிஜ்' பின்பக்கம் தண்ணீர் வடிந்து தேங்கக்கூடிய தொட்டியை வாரத்தில் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.
மொட்டை மாடியில் மழைநீர் தேங்கக்கூடிய வகையிலான பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். அப்போது தான், 'ஏடிஸ்' கொசு பரவலை தடுக்க முடியும்.
'ஏடிஸ்' வகை கொசுக்கள் உற்பத்தியை தடுப்பது மக்களிடையே உள்ள பொறுப்பு. மாநகராட்சியும் தடுப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. சென்னையைவிட புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகளவில் டெங்கு பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால், சென்னை மட்டுமின்றி அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, மாவட்ட நிர்வாகங்களுக்கு, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. இதனால், மழைக்கால நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதோடு டெங்கு போன்ற பாதிப்புகளும் அதிகரித்தால் மக்களின் அவதி மோசமாகிவிடும். இதை உணர்ந்து, அரசுத்துறைகள் சிறப்புக் கவனம் செலுத்துவது நல்லது.
நவம்பர், டிசம்பரில் மேலும் அதிகரிக்கும் டெங்கு தடுப்பு நடவடிக்கைளில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பொது சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கையை துவங்குவது அவசியம். காய்ச்சல் போன்ற டெங்கு அறிகுறி வரும் அனைவருக்கும் அதற்கான பரிசோதனை செய்வதில்லை. இரண்டு, மூன்று நாட்களுக்கு பின்தான் பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே, பாதிப்பு குறநை்த எண்ணிக்கையில்தான் உள்ளது எனக்கூறி, அலட்சியம் காட்டக்கூடாது. நவம்பர், டிசம்பரில் டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும். தற்போதே தடுப்பு நடவடிக்கை எடுத்தால், பாதிப்பின் எண்ணிக்கையை குறைக்க முடியும். - குழந்தைசாமி, பொது சுகாதாரத்துறை நிபுணர்
- நமது நிருபர் -

