/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திறப்பு விழா கண்டும் ஒதுக்கீடு செய்யப்படாத குடியிருப்புகள் திருச்சினாங்குப்பத்தில் 360 வீடுகள் பாழ்: பயனாளர்கள் மறியல்
/
திறப்பு விழா கண்டும் ஒதுக்கீடு செய்யப்படாத குடியிருப்புகள் திருச்சினாங்குப்பத்தில் 360 வீடுகள் பாழ்: பயனாளர்கள் மறியல்
திறப்பு விழா கண்டும் ஒதுக்கீடு செய்யப்படாத குடியிருப்புகள் திருச்சினாங்குப்பத்தில் 360 வீடுகள் பாழ்: பயனாளர்கள் மறியல்
திறப்பு விழா கண்டும் ஒதுக்கீடு செய்யப்படாத குடியிருப்புகள் திருச்சினாங்குப்பத்தில் 360 வீடுகள் பாழ்: பயனாளர்கள் மறியல்
ADDED : மார் 26, 2025 11:53 PM

திருவொற்றியூர், திருச்சினாங்குப்பத்தில், கடந்தாண்டு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வீடுகள், இன்னும் ஒதுக்கீடு செய்யப்படாததை கண்டித்து, பயனாளர்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
திருவொற்றியூர் மண்டலம், 14வது வார்டில் உள்ள திருச்சினாங்குப்பம் மீனவ கிராமத்தில், 2015ம் ஆண்டு குடிசை வீடுகள் அகற்றப்பட்டு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட முடிவானது.
அதன்படி, 2019ம் ஆண்டு, 35.63 கோடி ரூபாய் செலவில், தளம் ஒன்றிற்கு 20 வீடுகள் வீதம், ஒரு திட்ட பகுதியில், 120 வீடுகள் என, 360 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதை, கடந்தாண்டு ஜூலையில், முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிலையில், திறப்பு விழா கண்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை, பயனாளர்களுக்கு ஒப்படைக்க வேண்டும். அதற்கான பயனாளி பங்கீட்டு தொகையான, 2.40 லட்சம் ரூபாயில் 352 பேர், 50,000 ரூபாய் முன்பணம் செலுத்தியுள்ளனர்.
மீதமுள்ள தொகையை, வட்டியின்றி சுலப மாத தவணையில் பெற்றுக் கொள்ள வேண்டும். எனவே, பயனாளிகளுக்கு உடனடியாக வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனக் கூறி, 150க்கும் மேற்பட்டோர், திருச்சினாங்குப்பம் - எண்ணுார் விரைவு சாலையில், மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். இருப்பினும், பள்ளி வளாகம் முன் குழுமிய மக்கள், போலீசாரை சூழ்ந்து, வீடுகளை ஒதுக்கீடு செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பியதால், பரபரப்பு நிலவியது.
போலீசார் அறிவுறுத்தல்படி, தண்டையார்பேட்டை - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு சென்று, குடியிருப்பு பிரதிநிதிகள் முறையிட்டனர். அப்போது, கடிதம் வழங்கும் படியும், உயரதிகாரிகளை கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக, அதிகாரிகள் கூறினர்.
நாசமாகி வரும் கட்டடம்
திறப்பு விழா கண்டு ஓராண்டாகும் நிலையில், குடியிருப்புகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்படாததால், 'குடி'மகன் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
கட்டடத்தில் உள்ள பெரும்பாலான கதவு, ஜன்னல்கள் உடைந்து விட்டன. சில கட்டடங்களில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் துருப்பிடித்தும் காணப்படுகின்றன.
எனவே, வாரிய அதிகாரிகள் கவனித்து, மராமத்து பணிகளை மேற்கொண்டு, பயனாளிகளுக்கு குடியிருப்புகளை ஒப்படைக்க வேண்டும்.
விரைவில் நடவடிக்கை
இது குறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி கூறுகையில், ''பயனாளி பங்கீட்டு தொலையில் முன்பணம் 50,000 ரூபாய் போக, மீதமுள்ள தொகைக்கு, வங்கி கடன் ஏற்பாடு செய்து கொடுக்கும் நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது. பயனாளிகளின் கோரிக்கை குறித்து, உயரதிகாரிகளுக்கு, தகவல் தெரிவிக்கப்படும். விரைவில், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.