/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடபழனி முருகன் கோவில் முகப்பு சாலையில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் தவிப்பு
/
வடபழனி முருகன் கோவில் முகப்பு சாலையில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் தவிப்பு
வடபழனி முருகன் கோவில் முகப்பு சாலையில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் தவிப்பு
வடபழனி முருகன் கோவில் முகப்பு சாலையில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் தவிப்பு
ADDED : ஆக 13, 2025 05:33 AM

வடபழனி முருகன் கோவில் முகப்பு சாலையில், நடைபாதை கடைகள் நாளுக்கு நாள் பெருகி வருவதால், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நெரிசலில் தவித்து வருகின்றனர்.
சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற வடபழனி முருகப்பெருமான் கோவிலில், தினந்தோறும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். வார விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதுடன், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
ஆற்காடு சாலையில் இருந்து கோவில் முகப்பிற்கு செல்லும் பிரதான சாலையாக, ஆண்டவர் தெரு உள்ளது.
இந்த தெருவின் இருபுறமுள்ள பூ, மாலை, தேங்காய் விற்பனை செய்யும் கடைகள் சாலை யோரம் ஆக்கிரமித்துள்ளன. பலர், சாலையையே ஆக்கிரமித்து கடை விரிக்கின்றனர்.
சில உணவு விடுதிகள், காஸ் சிலிண்டர்களை ஆபத்தான முறையில், நடைபாதையில் வைத்து சமைக்கின்றனர். பகல் நேரங்களிலும், சரக்கு இறக்கும் வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
பக்தர்களை இறக்கிவிட வரும் வாகனங்களும், அடுத்த சவாரிக்காக ஓரம் கட்டி நிறுத்தப்படுகின்றன. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களும் சாலையில் நிற்பதால், பக்தர்கள் கோவில் நுழைவாயிலை அடையவே முடியாத நிலை ஏற்படுகிறது. திருவிழா மற்றும் விசேஷ நாட்களில், அச்சாலையே ஸ்தம்பித்து விடுகிறது.
அவ்வப்போது, ஆண்டவர் தெருவில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்ற, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும், ஆக்கிரமிப்பாளர்கள் அசைந்து கொடுப்பதாக இல்லை.
இந்நிலையில், செவ்வாய் கிழமையான நேற்று, கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆண்டவர் சாலையை கடந்து கோவிலுக்குள் நுழைய முடியாமல் மிகவும் தவித்தனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:
ஆண்டவர் தெருவில், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் பெருக, ஆளும் கட்சியினரே காரணம். அவர்கள், தினசரியாகவும், மாதந்தோறும் மாமூல் பெற்றுக்கொண்டு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
சம்பந்தப்பட்ட பகுதி கவுன்சிலர், 'தனக்கும், இந்த ஆக்கிரமிப்பிற்கும் எந்த சம்பந்தமில்லை' எனக்கூறி நழுவி விடுகிறார். அவரின் தலையீடு இல்லாத பட்சத்தில், தனது வார்டுக்கு உட்பட்ட முருகன் கோவில் முகப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, தனிப்பட்ட முறையில் அவரே நடவடிக்கை எடுக்கலாம்.
வடபழனி ஆண்டவர் கோவில் முகப்பு வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, போக்குவரத்து போலீசார், மாநகராட்சியினர், வார்டு கவுன்சிலர், கோவிலர் நிர்வாகம் என, அனைவரும் ஒருங்கிணைந்து முடிவு செய்ய வேண்டும்.
வாரத்திற்கு மூன்று நாட்கள், போக்குவரத்து போலீசார், மாநகராட்சியின் நடைபாதையில் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- நமது நிருபர்- -