மீனாட்சியம்மன் உட்பட 8 கோவில்களில் ரூ.500 கட்டணத்தில் 'பிரேக்கிங்' தரிசனம்; பக்தர்கள், ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு
மீனாட்சியம்மன் உட்பட 8 கோவில்களில் ரூ.500 கட்டணத்தில் 'பிரேக்கிங்' தரிசனம்; பக்தர்கள், ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு
ADDED : நவ 19, 2025 02:52 AM

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உட்பட 8 கோவில்களில் பக்தர்களின் தரிசனத்தை இடைநிறுத்தி, 500 ரூபாய் கட்டணத்தில் ஒருமணி நேர 'பிரேக்கிங்' தரிசனத்தை அறிமுகப்படுத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு பக்தர்கள், ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அறநிலையத்துறைக்குட்பட்ட முக்கிய கோவில்களில் இலவச தரிசனம் இருந்தாலும், கட்டண தரிசனத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன், சுவாமியை தரிசிக்க, 100 ரூபாய் செலுத்தி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
இந்த தரிசன கட்டணம் வசூலிப்பதற்கே எதிர்ப்பு உள்ள நிலையில், ஒரு மணி நேரம் 'பிரேக்கிங்' தரிசனம் முறையை அறநிலையத்துறை அறிமுகப்படுத்த உள்ளது.
மதுரை, பழனி, சமயபுரம், ஸ்ரீரங்கம் உட்பட 8 முக்கிய கோவில்களில் அறிமுகப்படுத்த, பக்தர்களிடம் அறநிலையத்துறை கருத்து கேட்டுள்ளது. இதற்கு பலரும் ஆட்சேபனை தெரிவித்து ஆன்லைனில் கருத்து தெரிவித்துள்ளனர்.
காத்திருக்கணும் ஆலயம் காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினகரன் கூறியதாவது:
கடவுள் முன் அனைவரும் சமம் என்பதை அறநிலையத்துறை மறந்து, வணிகரீதியாக செயல்பட்டு வருகிறது. பிரேக்கிங் தரிசனம் குறித்து வெளிப்படையாக தெரிவித்து மக்களிடம் கருத்து கேட்கவில்லை. அறநிலை யத்துறை சட்டப்பிரிவு 22ன் கீழ், மக்கள் கண்ணில் படும் இடங்களில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
நாளிதழில் விளம்பரப்படுத்த வேண்டும். அப்படி எதுவும் செய்யாமல் காலை, 8:30 மணி முதல் 9:30 மணி வரை பிரேக்கிங் தரிசனத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால், 100 ரூபாய் கட்டணம் செலுத்தியவர்கள், இலவச தரிசனத்திற்கு வந்தவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தர்ம தரிசனம் போதும் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில பொருளாளர் ஆதிசேஷன் கூறியதாவது:
அறநிலையத்துறையின் இந்த செயல்பாடு கண்டனத்திற்குரியது. இந்த தரிசன நேரத்தில் பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய் டிக்கெட் தரிசனம் முழுதும் நிறுத்தப்படுவது அடிப்படை வழிபாட்டு உரிமையை தடுக்கக்கூடிய செயல்.
ஏற் கனவே பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், மேலும் சில மணி நேரம் அதிகமாக நிற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
அரசியல் சாசனத்தி ன் அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமை திட்டமிட்டு முடக்கப்படுகிறது. கட்டண தரிசனமே கூடாது என்பதே எங்கள் இயக்கத்தின் கோரிக்கை. அனைவருக்கும் இலவச தரிசனம் என்பதே உண்மையான சம உரிமை, சமூக நீதி.
இவ்வாறு அவர் கூறினார்.

