/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சொர்க்க வாசலில் எழுந்தருளிய பெருமாள் அதிகாலை முதல் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
/
சொர்க்க வாசலில் எழுந்தருளிய பெருமாள் அதிகாலை முதல் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
சொர்க்க வாசலில் எழுந்தருளிய பெருமாள் அதிகாலை முதல் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
சொர்க்க வாசலில் எழுந்தருளிய பெருமாள் அதிகாலை முதல் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜன 11, 2025 12:30 AM

சென்னை, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகரில் உள்ள பெருமாள் கோவில்களில், நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
பிரசித்தி பெற்ற திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு மூலவர் வேங்கட கிருஷ்ணனுக்கு முத்தங்கி சேவை நடந்தது.
அதிகாலை, 4:30 மணிக்கு 'பரமபதவாசல்' எனும் 'சொர்க்கவாசல்' திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் உற்சவர் பார்த்தசாரதி பெருமாள், நம்மாழ்வாருக்கு காட்சியளித்தார்.
பின், சடகோபன் நம்மாழ்வாருக்கு மரியாதை செய்யப்பட்டு, வேத திவ்யப் பிரபந்தம் துவங்கியது.
இதையடுத்து, திருவாய் மொழி மேல் மண்டபத்தில் அமைந்துள்ள புண்ணிய கோடி விமானத்தில் உற்சவர் எழுந்தருளி, சேவை சாதித்தார்.
கோவிலை சுற்றி அமைக்கப்பட்ட திரையின் வாயிலாக, பக்தர்கள் சொர்க்கவாசல் திறப்பை கண்டு, தரிசித்தனர்.
ரங்கநாதர் கோவில்
பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில், ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோவிலில், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, பரமபதவாசல் திறக்கப்பட்டது.
வடபழனி, ஆதிலட்சுமி தாயார் சமேத ஆதிமூலப் பெருமாள் கோவிலில், அதிகாலை 5:15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, நம்மாழ்வாருக்கு மரியாதை செய்யப்பட்டது.
அடையாறு, அனந்தபத்மநாப சுவாமி கோவில், 336 மகர விளக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கருட வாகனத்தில் எழுந்தருளிய அனந்த பத்மநாப சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.
பின், சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, உற்சவர் பரமபதவாசலை கடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல், பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில், வில்லிவாக்கம் சவுமிய தாமோதரபெருமாள் கோவில், தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில், ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே காத்திருந்து, சுவாமியை தரிசித்தனர்.
சொர்க்க வாசல் திறப்பின் போது அவர்கள் எழுப்பிய கோவிந்தா... கோவிந்தா... என்ற கோஷம், விண்ணை அதிர செய்தது.