/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பழங்கலைகளை உயிர்ப்புடன் மீட்க இளம் தலைமுறையிடம் சேர்க்க வேண்டும் தோல்பாவைக் கூத்து முத்துசந்திரன்
/
பழங்கலைகளை உயிர்ப்புடன் மீட்க இளம் தலைமுறையிடம் சேர்க்க வேண்டும் தோல்பாவைக் கூத்து முத்துசந்திரன்
பழங்கலைகளை உயிர்ப்புடன் மீட்க இளம் தலைமுறையிடம் சேர்க்க வேண்டும் தோல்பாவைக் கூத்து முத்துசந்திரன்
பழங்கலைகளை உயிர்ப்புடன் மீட்க இளம் தலைமுறையிடம் சேர்க்க வேண்டும் தோல்பாவைக் கூத்து முத்துசந்திரன்
ADDED : ஜன 01, 2024 01:34 AM

சென்னை, தி.நகர், ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், வட அமெரிக்க தழிழ்ச் சங்கப் பேரவை சார்பில், 11ம் ஆண்டு மார்கழி இசை விழா நடந்து வருகிறது.
இதில், தமிழர்களின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றான, தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சி, 'கலைமாமணி' முத்துசந்திரன், 49, குழுவினரால் நடத்தப்பட்டது. வழக்கம்போல் அல்லாது, மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இக்கூத்துக் கலை நடத்தப்பட்டது.
துவக்கமாக, ஹிந்தி மொழி கற்பித்தல் காட்சியை நகைச்சுவை ததும்ப வழங்கி, சிறு பிஞ்சுகள் முதல் அரங்கிலிருந்த முதிர் இளைஞர்களையும், சிரிக்க வைத்தார் முத்துசந்திரன்.
தொடர்ந்து, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, குறும்பட பாணியில், ஒரு கதையை, காட்சி வழியே கடத்தி, இடைவேளைப் பகுதியாக அனுமன் கதை கூறி, தோல்பாவைக் கூத்தின் வாயிலாக, எதையும் எடுத்துச் செல்ல முடியும் என்பதை நிரூபித்தார்.
நகரத்தின் பின்னணியிலேயே வாழ்ந்து பழகி, முதன் முதலாய் இந்நிகழ்ச்சியைக் காண வந்தோருக்கு, தோல்பாவைக் கூத்து ஆச்சர்யம் தந்தது.
ஒளி பாய்ச்சப்பட்ட வெண் திரையில், அசைந்து, நகர்ந்து, வசனங்கள் பேசும் வரைபடங்கள் வாயிலாக, சினிமா பாணியில், இப்படியொரு நிகழ்ச்சியா என, அவர்கள் வியந்தது, நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி.
முத்துசந்திரன் கூறியதாவது:
தமிழர்களின் பாரம்பரிய, தொன்மை வாய்ந்த கூத்துக் கலை, அழிவின் விளிம்பில் உள்ளது. அதை மீட்டெடுக்கும் பொறுப்புடன், ஆறாவது தலைமுறையாக இதை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து வருகிறேன்.
இந்திய தேசத்தின் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் மற்றும் அறம் கூறும் தமிழ் இலக்கியங்களை, தோல்பாவை கூத்தின் வாயிலாக, பல இடங்களில் பதிவு செய்துள்ளேன்.
தொன்மை இலக்கியங்களை தோல்பாவைக் கூத்தின் வழியே கடத்தும்போது, அதிகபட்சமாக, 30 வகை ஆண் குரலிலும், நான்கு வித பெண் குரலிலும் பேச வேண்டும். அப்போதுதான் நிகழ்ச்சி சிறப்பாக அமையும். தொன்மைக் கலைகளே ஓர் இனத்தின் அடையாளச் சான்று.
அவை வீழாமல் பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இன்றைய இளம் தலைமுறையினரிடம், பண்பாடு, பாரம்பரியம் பற்றிக் கூறுவதோடு, பழங்கலைகள் பற்றியும் எடுத்துரைத்து, அவை மீண்டும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -