/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி ஏரி நீர்இருப்பு கணக்கிட டிஜிட்டல் அளவீட்டு கருவி பொருத்தம்
/
வேளச்சேரி ஏரி நீர்இருப்பு கணக்கிட டிஜிட்டல் அளவீட்டு கருவி பொருத்தம்
வேளச்சேரி ஏரி நீர்இருப்பு கணக்கிட டிஜிட்டல் அளவீட்டு கருவி பொருத்தம்
வேளச்சேரி ஏரி நீர்இருப்பு கணக்கிட டிஜிட்டல் அளவீட்டு கருவி பொருத்தம்
ADDED : நவ 03, 2025 02:25 AM

வேளச்சேரி:  வேளச்சேரி ஏரி நீர் இருப்பு மற்றும் வெளியேறும் உபரிநீரின் அளவை கணக்கிட, முதல் முறையாக டிஜிட்டல் அளவீட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வேளச்சேரி ஏரி, 252 ஏக்கரில் இருந்தது. திட்டப் பணிகள், ஆக்கிரமிப்புகள் போக, இப்போது 55 ஏக்கர் மட்டுமே உள்ளது. இதில், அதிக அளவு கழிவுநீர் கலப்பதால், ஏரிநீர் மாசடைவதுடன், சுற்றுவட்டார பகுதியில் உள்ள நிலத்தடி நீரும் மாசடைகிறது.
பருவமழையின் போது, கிண்டி, ஆதம்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து, ஏரியை வந்தடையும் வெள்ளம், மதகு வழியாக உபரிநீராக வெளியேறி, சதுப்பு நிலத்தை அடைகிறது.
ஆனால், ஏரியின் தெற்கு திசையில் உள்ள கரை வலுவிழந்துள்ளது. இதனால், கொள்ளளவை அதிகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை, ஏரியில் எவ்வளவு நீர் இருப்பு உள்ளது; வெளியேறும் உபரிநீரின் அளவு குறித்து, நீர்வளத்துறையிடம் துல்லியமான விபரம் இல்லை.
இந்நிலையில், ஏரியில் நீரின் இருப்பு விபரத்தை அறியவும், உபரிநீர் வெளியேறும் அளவை கணிக்கவும், முதல் முறையாக டிஜிட்டல் அளவீட்டு கருவி மதகு அருகில் பொருத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஏரியில் நீர்இருப்பு மற்றும் வெளியேறும் நீரை அளவீடு செய்து, செயற்கைக்கோள் வழியாக, சேப்பாக்கத்தில் உள்ள நீர்வளத்துறை தலைமை அலுவலகத்திற்கு, இந்த நவீன அளவீட்டு கருவி அனுப்பும்.
அங்கிருந்து, படப்பையில் உள்ள நீர்வளத்துறை அதிகாரிகளின் மொபைல் போனில் தகவல் அனுப்பப்படும். அங்குள்ள அதிகாரிகள், நீரின் அளவின் தன்மையை பொறுத்து, ஏரியை ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுப்பர்.
மேலும், வேளச்சேரி ஏரியில் நிரம்பும் நீரின் அளவை கணக்கிட்டு, அதற்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

