/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாழடைந்த கூவம் கால்வாய் தரைப்பாலங்கள் அண்ணா நகர் மண்டலத்தில் உயிர் பலி அச்சம்
/
பாழடைந்த கூவம் கால்வாய் தரைப்பாலங்கள் அண்ணா நகர் மண்டலத்தில் உயிர் பலி அச்சம்
பாழடைந்த கூவம் கால்வாய் தரைப்பாலங்கள் அண்ணா நகர் மண்டலத்தில் உயிர் பலி அச்சம்
பாழடைந்த கூவம் கால்வாய் தரைப்பாலங்கள் அண்ணா நகர் மண்டலத்தில் உயிர் பலி அச்சம்
ADDED : நவ 28, 2024 12:26 AM

அண்ணா நகர்,
அண்ணா நகர் மண்டலத்தில், கடுமையாக சேதமடைந்துள்ள விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் நல்லான் கால்வாய் தரைப்பாலங்களை, உயிர் பலி ஏற்படும் முன் சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
சென்னையின் பெரிய மழைநீர் வடிகால்வாய்களில், ஓட்டேரி நல்லா கால்வாயும் ஒன்று. மழைக்காலங்களில் அதிகமான வெள்ளம் வடிந்து செல்ல, ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது.
இக்கால்வாய், அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பாடி, வில்லிவாக்கத்தில் துவங்கி, அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் கார்டன், அயனாவரம், புரசைவாக்கம், ஓட்டேரி, புளியந்தோப்பு வழியாக பகிங்ஹாம் கால்வாயில் இணைகிறது.
நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள, 10.84 கி.மீ., துாரம் கொண்ட இக்கால்வாயை, போதிய அளவில் கூட பராமரிப்பது கிடையாது.
இதேபோல், விருகம்பாக்கம் கால்வாயும் முக்கியமானது. நெற்குன்றத்தில் துவங்கும் விருகம்பாக்கம் கால்வாய் அரும்பாக்கம், சூளைமேடு வழியாக, அமைந்தகரை கூவத்தில் கலக்கிறது.
இந்த விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் நல்லான் கால்வாய் செல்லும் பாதைகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்காக, பல ஆண்டுகளுக்கு முன், தரைப்பாலங்கள் கட்டப்பட்டன.
அந்த தரைப்பாலங்கள் மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் கடுமையாக சேதடைந்து உள்ளன.
சூளைமேடு
குறிப்பாக, சூளைமேடு கண்ணகி தெரு, வழியாக செல்லும் விருகம்பாக்கம் கால்வாயில், நான்கு அடி கொண்ட இணைப்பு பாலம் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது, தரைப்பாலம் சிதிலமடைந்து, பக்கவாட்டு தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.
அதே பகுதியில் உள்ள பாரி தெருவில் உள்ள தரைப்பாலத்தில், குப்பை மற்றும் கழிவுகள் தேங்கி நிற்கின்றன. வீரபாண்டியன் தெரு முதல் தெருவில் உள்ள தரைப்பாலம் பாழடைந்து கிடக்கிறது. அதுவும் எப்போது வேண்டுமானாலும், விழும் நிலையில் உள்ளது.
சூளைமேடு, மாதா கோவில் தெரு மற்றும் அண்ணா நெடும்பாதையை இணைக்கும் பகுதியில் அரும்பாக்கம், அமைந்தகரை வழியாக வரும் விருகம்பாக்கம் கால்வாய் செல்கிறது.
இந்த கால்வாயில் பொதுமக்கள் கடப்பதற்கான நான்கு அடி அகலம் கொண்ட, 40 ஆண்டுகள் பழமையான தரைப்பாலம் உள்ளது. இப்பகுதியில் வசிப்போர் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை கடந்து, பெரியார் பாதை வழியாக சூளைமேடு, அரும்பாக்கம், அண்ணா நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையின் போது, தரைப்பாலத்தின் இருபுறங்களில் இருந்த பக்கவாட்டு தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.
இதை சீரமைக்க நிதி ஒதுக்கி, இரண்டு முறை பூமி பூஜையும், ஒரு முறை முதல்வர் ஸ்டாலினும் அடிக்கல் நாட்டினர். ஆனால், இதுவரை எந்த பணியும் நடக்கவில்லை.
அரும்பாக்கம்
அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி அருகில், பத்மநாப நகர், தமிழர் வீதியில் செல்லும் விருகம்பாக்கம் கால்வாயில் முட்செடிகள் வளர்ந்து, அதன் தரைப்பாலமும் சேதமடைந்து கிடக்கிறது. இங்கு தேங்கும் குப்பையால் மழைக்காலங்களில் நீரோட்டம் பாதிக்கிறது.
கீழ்ப்பாக்கம்
அண்ணா நகர் கிழக்கு பகுதியான, பள்ளி அரசன் தெருவின் வழியாக சென்று, கீழ்ப்பாக்கம் மண்டபம் சாலை மற்றும் ஆஸ்பிரியன் கார்டனை கடந்து, ஓட்டேரி கால்வாயில் செல்கிறது.
இந்த பள்ளி அரசன் தெரு வழியாக செல்லும் கால்வாயில், குப்பை கழிவுகள் தேங்குகின்றன. மண்டபம் சாலை அருகில் உள்ள ஓட்டேரி நல்லான் கால்வாய் பாலமும், பாழடைந்து படுமோசமாக காட்சியளிக்கிறது.
வில்லிவாக்கம்
வில்லிவாக்கம், அகத்தியர் நகரில், பாடியில் இருந்து, ஐ.சி.எப்., நோக்கி, திறந்தவெளியில் கூவம் கால்வாய் செல்கிறது.
இந்த கால்வாயில் வெளியேறும் வாயுவால், பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவதாக பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நம் நாளிதழில் செய்தி வெளியான பின், குறிப்பிட்ட இடங்களில் மட்டும் திறந்தவெளியில் இருந்த கால்வாயை மட்டும் மூடினர்.
இதுபோன்ற அவல நிலை, அண்ணா நகரில் மட்டுமின்றி, சென்னை மாநகரம் முழுதும் உள்ளது. இதனால், மழைக்காலங்களில் இதுபோன்ற கால்வாய் அருகில் வசிப்போர் உயிரை கையில் பிடித்தபடி வாழ்கின்றனர்.
சம்பந்தப்பட்ட துறையினர் இதை கண்காணித்து, சேதமடைந்த தரைப்பாலங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.