/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'தினமலர்' வீட்டு உபயோக பொருள் கண்காட்சி நிறைவு
/
'தினமலர்' வீட்டு உபயோக பொருள் கண்காட்சி நிறைவு
ADDED : ஆக 05, 2025 02:44 AM

சென்னை: சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் கடந்த 1ம் தேதி துவங்கிய, 'தினமலர்' வீட்டு உபயோக பொருள் கண்காட்சி நேற்று நிறைவடைந்தது.
'தினமலர்' நாளிதழ் மற்றும் 'சத்யா' நிறுவ னம் சார்பில், சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், வீட்டு உபயோக பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த 1ம் தேதி துவங்கியது . கடந்த நான்கு நாட்களாக, சென்னை மக்களின் அமோக ஆதரவுடன் நடந்த கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. கண்காட்சியில், குளுகுளு 'ஏசி' வசதியுடன், 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன.
அவற்றில், 'பிரிஜ், வாஷிங் மிஷின், ஏசி, டிவி' என எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டன. பல்வேறு வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கு விலை சலுகை வழங்கப்பட்டதுடன், தள்ளுபடியும் சேர்ந்ததால், மக்கள் மகிழ்ச்சியுடன் 'பிரீ டெலிவரி'யில் வாங்கி சென்றனர்.
தேக்கு, பூவரசு, வேம்பு, ஷீஷாங், கோங்கு உள்ளிட்ட மரப்பலகைகளில் செய்த உணவு மேஜைகள், நாற்காலிகள், கட்டில்கள், பீரோக்கள், ஊஞ்சல்கள், ஷோபாக்கள் போன்றவற்றின் கலைநயங்களில் பார்வையாளர்கள் சொக்கினர். ஷோரூம்களுக்கு செல்லாமலேயே, சொகுசு கார்களையும், பைக்குகளையும் அருகருகே கண்ட மக்கள், 'டெஸ்ட் டிரைவ்'வுக்கு நாள் குறித்து சென்றனர்.
வீடு, மனைகள் வாங்க புரமோட்டர்களிடம் விபரம் கேட்டவர்களும், வீட்டு உபயோக பொருட்களை ஆசை ஆசையாக வாங்கிக் கொண்டு, துாக்க முடியாமல் துாக்கிச் சென்றோரும் வடகம் அதிகம். அப்பளம், ஊறுகாய், வத்தல், இனிப்பு, கார வகைகளை சுவைத்து பார்த்து, பரம திருப்தியுடன் வாங்கிச் சென்றனர்.
கிரைண்டர், மிக்சி, காஸ் ஸ்டவ், சிம்னி என அடுப்பங்கரை பொருட்களையும், மசாஜ் தைலம், எண்ணெய், மூலிகை பொடிகள் என ஆரோக்கியம் சார்ந்த பொருட்களையும் தேடித் தேடி வாங்கியோர் கண்களில் ஆனந்தமே பொங்கியது. 'டிஷ்யூம் டிஷ்யூம்' போடும் குட்டிக் குழந்தைகள் டேஷிங் காரிலும், சேசிங் காரிலும் சுற்றி மகிழ்ந்தனர்.
சுட்டிக் குழந்தைகள், மிதவை படகுகளில் மீன்களானதையும், மேஜிக் ஷோவை கண்டு களித்ததையும், பனிக்கட்டிகளில் துள்ளியோடி மான்களானதையும் படம் பிடித்த பெற்றோரின் கண்கள், மகிழ்ச்சியில் குளிர்ந்தன.
ஆஹா... ஓஹோ... என ரசித்து வாங்கிய பொருட்களுடன், 250 அரங்குகளையும் சுற்றிப் பார்த்து, அப்பாடா என வெளியேறியபோது, பலரின் வயிறை கிள்ளி எடுத்தது பசி. அவர்களை அள்ளி எடுத்தது 'புட் கோர்ட்'டின் ருசி.
கண்டது போதும், உண்டது போதும் என வெளியேறியோரை, அன்பாய் அழைத்து, ஆடாமல், அசையாமல், 'அவுட் கேட்'டில் விட்டன பேட்டரி வாகனங்கள். 'தினமலர்' வாசகர்களாலும், வாடிக்கையாளர்களாலும் நிரம்பி வழிந்த நந்தனம் மைதானத்தின் நான்கு நாள் பொருட்காட்சி, நல்ல விதமாக நேற்றுடன் நிறைவு பெற்றது.

