/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2வது நாளில் 'தினமலர் - வழிகாட்டி' நிகழ்ச்சி பாடத்திட்டத்தை தாண்டிய பன்முகத்திறன் அவசியம்
/
2வது நாளில் 'தினமலர் - வழிகாட்டி' நிகழ்ச்சி பாடத்திட்டத்தை தாண்டிய பன்முகத்திறன் அவசியம்
2வது நாளில் 'தினமலர் - வழிகாட்டி' நிகழ்ச்சி பாடத்திட்டத்தை தாண்டிய பன்முகத்திறன் அவசியம்
2வது நாளில் 'தினமலர் - வழிகாட்டி' நிகழ்ச்சி பாடத்திட்டத்தை தாண்டிய பன்முகத்திறன் அவசியம்
UPDATED : மார் 30, 2025 04:58 AM
ADDED : மார் 30, 2025 03:21 AM

சென்னை: 'தினமலர் - வழிகாட்டி' நிகழ்ச்சியின், இரண்டாவது நாளாக நேற்று, மாணவர்களின் கூட்டம் அலைமோதியது. என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என, வல்லுநர்களிடம் ஆலோசனைகள் கேட்டு பயனடைந்தனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடித்துள்ள மாணவர்கள், அடுத்து உயர் கல்வியில் சேர்வதற்கு ஆலோசனை தரும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'வழிகாட்டி' எனும் மூன்று நாட்கள் நிகழ்ச்சி, கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழுமத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாவது நாளாக நேற்று காலை முதல் மாணவர்கள், தங்கள் பெற்றோர்களுடன் ஆர்வமாக வந்தனர். இந்நிகழ்ச்சியை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர் கல்வி கண்காட்சியில், கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமம், சென்னை சிவ் நாடார் பல்கலை, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி குழுமம், அமெட் பல்கலை, வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி உட்பட, 80க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் சார்பில், 'ஸ்டால்'கள் அமைக்கப்பட்டுள்ளன.
கருத்தரங்கின் இரண்டாவது நாளாக நேற்று, வருங்காலத் தொழில்நுட்பங்கள், பொறியியல் துறையின் எதிர்கால வாய்ப்புகள் உட்பட பல தலைப்புகளில், வல்லுநர்கள் பேசினர்.
மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்று குறிப்புகளை எடுத்துக் கொண்டனர். சிலர் தங்களது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து கொண்டனர்.
மேலும், கருத்தரங்கின் முடிவில், பெற்றோர் மற்றும் மாணவர்கள், நேரடியாக கல்வியாளர்களை சந்தித்து ஆலோசனைகள் கேட்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவு திறனான, ஏ.ஐ., தொழில்நுட்ப பயன்பாடு, தற்போது பொறியியல், மருத்துவம், நிதி மற்றும் வங்கிகளில் அதிகரித்து வருகிறது.
ஏ.ஐ., தனியாக படிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படாது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதவர்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும். மாற்றம் ஒன்றே மாறாது. காலத்துக்கு ஏற்ற தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டும். இதற்கான, திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
'எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன்' படிப்புக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. செமி கண்டக்டர் துறை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. 'ரோபோடிக்ஸ் சயின்ஸ்' துறையில் வாய்ப்பு அதிகமாக உள்ளன. பொறியியல் படிப்பில் ஒரு பிரிவை எடுத்து படிப்பதற்கு முன், அது 'கேட்' தேர்வின் பாடப்பிரிவில் இருக்கிறதா என பார்க்க வேண்டும்.
கல்லுாரி தேர்வு செய்வதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அந்த கல்லுாரி, என்.ஐ.ஆர்.எப்., ரேங்கில் இருக்கிறதா என பார்க்க வேண்டும். கல்வி கட்டணம் எவ்வளவு, உதவித்தொகை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இ.சி., - இ.இ.இ., - சைபர் செக்யூரிட்டி, பையோ மெடிக்கல், வெர்சுவல் ரியாலிட்டி போன்ற பொறியியல் படிப்புகளுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. படிக்கும்போது, ஜப்பானிய மொழி அல்லது ஜெர்மன் மொழியை கற்றுக் கொள்ளுங்கள். மின்சார வாகனங்களின் பழைய பேட்டரிகளை எடுத்து, மறுசுழற்சி செய்து தொழில் துவங்கினால், நல்ல வாய்ப்புகள் உள்ளன. தேவையை அறிந்து படித்தால் தான் வேலைவாய்ப்பு பெற முடியும்.
உங்களது பாடத்திட்டத்தைத் தாண்டி, பன்முகத் திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
'மஹிந்திரா இன்னோவேஷன் டெக்' துணைத் தலைவர் சங்கர் வேணுகோபால் பேசியதாவது;
தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சந்தை மாற்றங்கள், தொழில்துறையின் இயல்பை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளன. தொழில்துறை எதிர்பார்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியம். தொழில்நுட்ப அறிவு, புதிய தொழில்நுட்பங்களை விரைவாக கற்றுக்கொள்ளும் திறன், வேகமாக மாறும் சூழல்களுக்கேற்ப, தங்களை மாற்றிக்கொள்வது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கல்வியாளர் நெடுஞ்செழியன் பேசியதாவது:
எதைக் கொடுத்தாலும், படிக்க வேண்டும் என்ற, மனநிலை தற்போது திணிக்கப்பட்டு வருகிறது.
அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இவர்கள் நினைத்தால், உலகளவில் சாதிக்க இயலும். ஆனால், 100 சதவீதத்தில் 28.4 சதவீத மாணவர்களே, பள்ளிப் படிப்பிற்கு பின், உயர்கல்வி நிலையங்களில் சேர்கின்றனர். கல்வி வேலைக்கு செல்லும் சாவியாக இல்லாமல், தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொழில்துறை வல்லுநர் அரவிந்த் பேசியதாவது:
மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு பாடங்களை, ஆர்வமாக தேர்வு செய்கின்றனர். பலர் கூடுதல் பணம் செலவழித்து, 'ஏஐ.,' எனப்படும் செயற்கை நுண்ணறிவு பாடத்தை மட்டும் படிக்கின்றனர். உங்கள் மூளை செயற்கை நுண்ணறிவை விட சக்தி வாய்ந்தது.
பல நிறுவனங்கள் நிதி ஆலோசனை, முதலீட்டு வங்கி, பொருளாதார மதிப்பீடு போன்ற புதிய வேலைகளை உருவாக்கி வருகின்றன. யு.பி.ஐ., போன்ற வசதிகள் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன. பி.காம் போன்ற படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.