ADDED : மார் 15, 2025 11:53 PM
சென்னை, சென்னை மாநகராட்சியில், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், ஒரே வார்டில், 10 ஆண்டுகளுக்கு மேலாக சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் பணியாற்றும் நிலை தொடர்கிறது.
இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இச்செய்தி வெளிவந்த சில மணி நேரங்களிலேயே, 101 சுகாதார ஆய்வாளர்கள் பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டு, உடனடியாக பணியிட மாறுதல் வழங்கும் ஆணை வெளியிடப்பட்டது.
அவசர கதியில் நடந்த பணியிட மாறுதலால், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட மண்டலங்களில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்களின் ஏழு பேர், பணி ஒதுக்கீடு பட்டியலில் விடுபட்டுள்ளனர்.
அவர்கள் பணியாற்றிய இடங்களுக்கு, மற்றொரு சுகாதார ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இவர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
அவசரகதியில் பணியிட மாறுதல் நடந்ததால், இந்த தவறு நடந்துள்ளது. அவர்களுக்கு முறையாக பணி ஒதுக்கீடு செய்யப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.